2024ல் தங்கத்தின் விலை சுமார் 30 சதவீதம் உயர்ந்தது. இந்த ஆண்டில் கொஞ்சம் குறையும் என்று எதிர்பார்த்தால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இது ஆண்டில் இதுவரை தங்கத்தின் விலை 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. டிரம்பின் அறிவிப்பால் கடந்த திங்கட்கிழமையன்று தங்கத்தின் விலை 1.5 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது. ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதிகள் அனைத்திற்கும் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். மேலும், இந்த வாரம் மற்ற நாடுகள் விதித்த வரி விகிதங்களுக்கு பொருந்தும்வகையில், பரஸ்பர வரிகளை அறிவிக்க உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்பின் இந்த நடவடிக்கையால் நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர். மேலும் உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் தஙகத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலக தங்க கவுன்சிலின் தகவல்படி, தொடர்ந்து 3வது ஆண்டாக கடந்த ஆண்டிலும் மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் 1,000 டன்னை தாண்டிவிட்டது. 2024ம் மத்திய வங்கிகள் 1,044.6 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. அதிகபட்சமாக போலந்து89.54 டன் தங்கம் வாங்கியுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
அடுத்ததாக இந்திய ரிசர்வ் வங்கி 72.60 டன்னும், சீனா 44.17 டன்னும் வாங்கியுள்ளன.
2023 நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் 4,830 கோடி டாலர் மதிப்பிலான 803.58 டன் தங்கம் இருந்தது. 2024ம் ஆண்டில் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு மற்றும் அளவு முறையே 6,620 கோடி டாலர் மற்றும் 876.18 டன்னாக உயர்ந்தது. கடந்த ஆண்டில் மட்டும் ரிசர்வ் வங்கி 72.60 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இது 2021ம் ஆண்டு முதல் இதுவரையிலான காலத்தில் ஒரு ஆண்டில் ரிசர்வ் வங்கி வாங்கிய அதிகபட்ச அளவாகும். 2023ம் ஆண்டில் 18 டன் தங்கத்தை மட்டுமே ரிசர்வ் வங்கி வாங்கி இருந்தது. மேலும், 2017ம் ஆண்டு முதல் இதுவரையிலான காலத்தில் ரிசர்வ் வங்கியின் இரண்டாவது அதிகபட்ச தங்க கொள்முதல் (2024ம் ஆண்டு) இதுவாகும். தங்கத்தை வாங்கி வர்த்தகமும் செய்வது கிடையாது அப்புறம் ஏன் ரிசர்வ் வங்கி ஏன் இவ்வளவு தீவிரமாக தங்கத்தை வாங்குகிறது என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.
ஆனால் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவிப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது.
நாணய ஏற்ற இறக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் இருப்புகளின் மறுமதிப்பீட்டிலிருந்து (குறைதல்) தன்னை பாதுகாத்து கொள்ள தங்க கொள்முதல் உதவுவதால் ரிசர்வ் வங்கி தீவிரமாக தங்கத்தை வாங்கி வருகிறது. உதாரணமாக, 2024 ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் மதிப்பீட்டு ஆதாயத்தால் அன்னிய செலாவணி கையிருப்பு கூடுதலாக 5,600 கோடி டாலர் உயர்ந்தது. இதே காலத்தில் தங்கத்தின் விலை 25 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. ரிசர்வ் வங்கி கையிருப்பில் உள்ள தங்கத்தை வைத்து எந்த வர்த்தக லாபத்தையும் பெறவில்லை என்றாலும், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு உயர்வு, மொத்த அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு உயர்வுக்கு உதவியது.
சான்றாக, 2025 ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் வசம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு 63,060 கோடி டாலராக இருந்தது. இது ஜனவரி 24ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தை விட 105 கோடி டாலர் அதிகமாகும்.
இதற்கு முக்கிய காரணம் தங்க கையிருப்பாகும். அந்த வாரத்தில் தங்கத்தின் மதிப்பு மட்டும் 120 கோடி டாலர் உயர்ந்து 7,089 கோடி டாலராக இருந்தது. ரிசர்வ் வங்கி வசம் உள்ள கரன்சிகளின் மதிப்பு சரிவு கண்டாலும், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு உயர்ந்து ஒட்டு மொத்த அளவில் அன்னிய செலாவணியின் கையிருப்பு மதிப்பை அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment