வேலைவாய்ப்பு செய்திகள் 2024
இதற்காக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கடுமையாக தேர்வுகளுக்கு தயாராவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தவிர்க்க முடியாத நேரங்களில் வினாத்தாளில் தவறுகள் உள்ளிட்ட குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு கருணை மதிப்பெண்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவது வழக்கம். மேலும் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தேர்வர்களுக்கு மதிப்பெண்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கும் முறை உள்ளது. இதிலும் தீர்வு எட்டவில்லை எனில் சில தேர்வர்கள் நீதிமன்றங்கள் வாயிலாக இதற்கான தீர்வை நாடுகின்றனர். அந்த வகையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க உத்தரவிட கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு: மதுரையைச் சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது, “கடந்த மார்ச் 28ஆம் தேதி, 2024 குரூப் 1 தேர்வு அறிவிப்பை tnpsc வெளியிட்டது. முதல் நிலை தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான தற்காலிக விடைக்குறிப்பு ஜூலை 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் 7 நாட்களுக்குள்ளாக குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மொழிபெயர்ப்பில் தவறு: ஆனால் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளை குறிப்பிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மேலும் 6 வினாக்களில் மொழி பெயர்ப்புகளில் தவறுகள் இருந்ததால், அது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்திருந்தேன். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிப்பதோடு,
6 வினாக்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளிக்க உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல தேர்வுகளுக்கு இதுவரை இறுதி விடை குறிப்புகள் வெளியிடப்படவில்லை நீதித்துறை தேர்வுகளுக்கு கூட இறுதி குறிப்புகள் வெளியிடப்படவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment