சென்னை: ஐ.ஏ.எஸ்., போன்ற பதவிக்கான சிவில் சர்வீஸ் தேர்வின் கேள்வி தாள்களை மாநில மொழிகளில் ஏன் வழங்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனு:
ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
கடந்த பிப்ரவரியில் இந்த தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி,
அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளில் ஒன்றில், விடை எழுதலாம். ஆனால், ஆரம்பகட்ட தேர்வுக்கான கேள்வித்தாள், ஆங்கிலம், ஹிந்தியில் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுஉள்ளது.
ஆங்கிலம், ஹிந்தி தவிர்த்து, மற்ற மொழிகளில் தேர்வு எழுத வாய்ப்பு இல்லை. ஹிந்தி மொழி தெரிந்தவர்களுக்கு சாதகமாக, தளம் உள்ளது. பொது வேலைவாய்ப்பில் சமத்துவம் மறுக்கப்படுவது, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவது போலாகும்.
எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 22 மொழிகளிலும், சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தக் கோரி, மத்திய அரசு மற்றும் தேர்வாணையத்துக்கு மனு அனுப்பினேன். ஆங்கிலம், ஹிந்தி மொழியில் பரிச்சயம் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு, கேள்வித்தாளை புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும்.
ஹிந்தி தவிர்த்து மற்ற பிராந்திய மொழிகளில் கேள்வித்தாள் இல்லாதது, பாரபட்சமானது; அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே, எட்டாவது அட்டவணையில் உள்ள பிராந்திய மொழிகள் அனைத்திலும், சிவில் சர்வீஸ் தேர்வை நடத்த, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா,
நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அனைத்து தேர்வுகளும் விதிகளின்படியே நடத்தப்படுகிறது என்றும் இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கும்படியும், மத்திய அரசப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் கோரப்பட்டது.
இதையடுத்து, சிவில் சர்வீஸ் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதித்துள்ள நிலையில், கேள்வி தாள்களை அந்தந்த மாநில மொழிகளில் ஏன் வழங்கக் கூடாது என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. விசாரணையை, ஜனவரிக்கு தள்ளி வைத்தது.
No comments:
Post a Comment