அரசு கலைக் கல்லுாரி உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தகுதியுள்ள ஆசிரியர்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்,' என மதுரையில் தமிழ்நாடு நெட்/செட்/பிஎச்.டி., ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
இச்சங்க மண்டல குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணவேணி (மதுரை), காளிதாஸ் (ராமநாதபுரம்) தலைமையில் நடந்தது. விருதுநகர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளர் ரமேஷ், இணை செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் ஜவஹர் பேசுகையில், ''தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் 1970 களில் வழங்கப்பட்டது
போல் 50 சதவீதம் பணியிடங்களை அனைத்து வகை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் நெட்/செட்/பி.எச்.டி., முடித்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பணிமாறுதல் வழங்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவுள்ள போட்டித் தேர்வு அறிவிப்பில் இத்தகுதியுடைய ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மார்ச் முதல் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றார். இதுதொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மகளிரணி செயலாளர் ஜோதிமுத்து நன்றி கூறினார்.
No comments:
Post a Comment