தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்குகிறது. இதில், சில முக்கிய அறிவிப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தும் அம்சங்களும் இடம்பெற வாய்ப்புள்ளது.
சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. கடந்தாண்டு சட்டப்பேரவை முதல் கூட்டம் கரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு வழக்கமான புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள பேரவைக் கூட்ட அரங்கிலேயே நடத்தப்படுகிறது.
சட்டப்பேரவை முதல் கூட்டத்துக்காக, ஆளுநர் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமைச்செயலகத்துக்கு 9.50 மணிக்கு வருகிறார். ஆளுநரை, பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்கின்றனர். அதன்பின், காலை 10 மணிக்கு கூட்ட அரங்குக்குள் வரும் ஆளுநர் தனது உரையை வாசிப்பார். உரையை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசிப்பார்.
தமிழக அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து பாராட்டியும், சில புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், தமிழக அரசின் எதிர்பார்ப்புகள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலான, சில வலியுறுத்தல்களையும் அவர் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment