சென்னை: பணி நீட்டிப்பு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த செவிலியர்கள் நிர்வாகிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ஒப்பந்த செவிலியர்கள் ஒருவரையும் கைவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தற்காலிக முறையில் ஒப்பந்த செவிலியா்களாக நியமிக்கப்பட்டனா்.
ஒப்பந்த காலத்திற்கு பின் 3,000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 3,000 பேருக்கு பணிக்கால ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு கடந்த வாரம் ஆணை வெளியிட்டது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.
பேச்சுவார்த்தை இதையடுத்து சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் செவிலியர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மா.சுப்பிரமணியன் பேச்சு இந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மா.சுப்பிரமணியன் கூறுகையில், ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி பாதிப்பு இருக்க கூடாது என்ற அடிப்படையில் மாற்று யோசனையின்படி, மக்களை தேடி மருத்துவம், நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் ஆகிய துறைகளில் இவர்களை கொண்டு நிரப்பிட அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் தமிழக அரசு அறிவிப்பை வெளியிடப்பட்டது.
தமிழக அரசு அறிவிப்பு இதுவரை ரூ.14 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிய ஒப்பந்த செவிலியர்களுக்கு புதிதாக சேரும் பணிகள் மூலம் ரூ.18 ஆயிரம் வரை கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், தற்காலிக ஒப்பந்த செவிலியர்கள் சொந்த ஊர்களுக்கு பணி மாறுதல் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் தற்காலிக செவிலியர்களுக்கு பணி மாறுதல் வழங்குவது இயலாத காரியம். இவையனைத்தும் பேச்சுவார்த்தையின் போது கூறப்பட்டது.
பணி நீட்டிப்பு கோரிக்கை ஆனால் ஒப்பந்த செவிலியர்கள் என்றே பணி நீட்டிப்பு வழங்க வலியுறுத்தி வந்தார்கள். 2 மணி நேரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணைகளை காட்டினர். ஆனால் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பணியை நீட்டிப்பு வேண்டாம். டிஎம்எஸ் ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்கள். அதற்கு வாய்ப்பில்லை என்று மருத்துவத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை அதன்பின்னர் நேரடியாக தமிழக அரசின் நிதி ஆதாரத்தின் கீழ் பணி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். எது எப்படி இருந்தாலும், செவிலியர்கள் பணி பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் தருகிறது என்று தான் பணி வழங்கப்பட்டது. நீண்ட நேரமாக நடந்த பேச்சுவார்த்தையில் மருத்துவத்துறை இயக்குநரகம் உள்ளிட்ட இடங்களுக்கான காலி பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் இன்னும் சில விஷயங்கள் பற்றி பேசப்படும் என்று தெரிவித்தார்.
போராட்டம் தொடரும் இதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடரும் என்று ஒப்பந்தம் செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment