இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை தமிழக அரசு வழங்கியது.
இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21.1.2023) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 24 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் 400-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள், திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல்,
திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கம்
போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் குறைந்த தொகுப்பூதியத்தினை கருத்தில் கொண்டு, அவர்களது நலன் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக 5
கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி ஆட்சிக்குழுக் கூட்டத்தில் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 225 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் 129 ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழ்நாடு முதலமைச்சர் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் நிருவாகத்திலுள்ள மூன்று கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி, தென்காசி மாவட்டம்,
குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் மற்றும் பள்ளியின் 24 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கினார். இந்த தொகுப்பூதிய உயர்வின் மூலம் ஆண்டிற்கு 2.72 கோடி ரூபாய் நிர்வாகத்திற்கு கூடுதல் செலவினம் ஏற்படும் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment