சென்னையில் 74வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ரிப்பன் கட்டட வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா ராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது மூவர்ண பலூன்களை வானில் பறக்க விட்டார். இதையடுத்து காவல்துறையினர், தேசிய மாணவர் படை, சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
குடியரசு தின விழா
பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், நிலைக்குழு தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளால் “கண்ணுக்கு காட்சி அறிவுக்கு மீட்சி” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட கலைநயமிக்க கண்காட்சி நடைபெற்றது.
மாணவர்களின் கண்டுபிடிப்புகள்
அதில் மாணவர்கள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தினர். ஒவ்வொரு மாணவரிடமும் புதிய கண்டுபிடிப்புகளின் செயல்முறை விளக்கம் குறித்து மேயர் கேட்டறிந்தார்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
அதில், வீடுகளில் கிடைக்கும் மக்கும் குப்பைகளில் இருந்து உயிரி எரிவாயு உருவாக்கும் சிறிய ரக அலகை மாணவர் ஒருவர் கண்டுபிடித்திருந்தார். அவர் வேளச்சேரி மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவர் இஷான் மிலன் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது.சான்றிதழ் வழங்கி பாராட்டு
அவருக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கி மேயர் கவுரவித்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சியில் அதிக சொத்து வரி செலுத்திய மற்றும் முறையாக உரிய காலத்திற்குள் சொத்து வரி செலுத்திய சொத்து உரிமையாளர்களை பாராட்டி கடிதங்களை வழங்கினார். மேலும் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்களையும் பாராட்டி சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கினார்.
மாநகராட்சி பட்ஜெட் தயாரிப்பு
சென்னை மாநகராட்சி 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலுக்கு தயாராகி வருகிறது. வழக்கம் போல் வரிச் சலுகை, புதிய திட்டங்கள், மாநகரை விரிவுபடுத்துதல், மாசற்ற சுற்றுச்சூழல் என பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை மேயர் பிரியா முடுக்கி விட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள், உறுப்பினர்களிடம் பட்ஜெட் தயாரிப்பு குறித்து தனித்தனியே ஆலோசனை செய்து வருகிறார்.
புதிய திட்டங்கள்
மேலும் வார்டு வாரியாக வரி வசூல் மற்றும் செலவினங்கள் தொடர்பான கணக்குகளை தாக்கல் செய்ய மண்டல குழு தலைவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் திட்டங்கள் குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. நடப்பு பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சாலை உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சொத்து வரி தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment