தமிழ்நாட்டுக் கல்வித்துறை சீல்பிடித்து, தரவரிசைக் குறியீட்டில் சறுக்கிவிட்டதா? ஆசிரியர்களை எழுத்தாளர் சமஸ் தொடர்ந்து சாடிவருவது அறமா?
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
Arunchol அருஞ்சொல் மின்னிதழின் ஆசிரியர் சமஸ் Samas 'அசைந்து கொடுக்கக் கூடாது தமிழக அரசு!' என்ற தலைப்பில், ஒன்றியக் கல்வி அமைச்சக தரமதிப்பீடு தொடர்பான தாத்தாப்பார்வை செய்திகளையும், அவரது நண்பரான ஆசிரியர் ஒருவரின் முரட்டு உளறலையும் முன்வைத்து தமிழ்நாட்டு ஆசிரியர்களை ஏகத்திற்கு இழிவிற்குட்படுத்தி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், கல்வித்துறை சீல்பிடித்துள்ளது; அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்; சங்கங்களுக்கு திமுக அரசு பணிந்து போகக்கூடாது என்றெல்லாம் கொதித்திருந்தார்.
அப்பதிவில் சமஸ் குறிப்பிட்ட அனைத்திற்கும் முறையான மறுப்பை ஆசிரியர்கள் எவராலும் வெளியிட முடியும் என்றாலும், PGI எனும் தரமதிப்பீடு சார்ந்த விடயங்களைத் தெளிவுபடுத்துவதே அறிவார்ந்த முதன்மை மறுவினையாக இருக்கும் என்பதால் அதை மட்டுமே இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
அடிப்படையில் நான் சமஸ் மீது பெருமதிப்புடையவன். அவரது இதழியல் அறம் கண்டு வியந்தவன். என்றாலும் சமஸின் இப்பதிவு, 'எவர் கூறினும் மெய்ப்பொருள் காண்பதே அறிவு; அதன்ழி வெளிப்படுவது மட்டுமே அறம்!' என்பதை மீண்டும் ஒருமுறை நெற்றிப்பொட்டில் அடித்து உணர்த்தியுள்ளது எனக்கு.
"போறதுதேன் போற அப்டியே அந்த இளிச்சவாயி வாத்தியானுகள ரெண்டு திட்டு திட்டீட்டு போ. . .!" என்ற பொதுப்புத்திக்கு கடந்த சில மாதங்களாக சமஸ் தனது சிந்தையைக் கடன்கொடுத்துவிட்டார் போலும். . ! (ஆம். இது அவரின் 2-வது பதிவு. அதற்கான பதில் முதல் comment-ல்)
கல்வித்துறைக்கு உள்ளேயும் வெளியேயும் சமஸ் போன்றே கடன் கொடுத்தோரின் சிந்தைகளை மெய்ப்பொருள் கொண்டு மீட்க வேண்டியது தெளிவுள்ளோரின் கடமை.
சரி. மெய்ப்பொருள் காண்போமா. . . .!
Performance Grading Index (PGI) என்பது ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் மாநிலங்களின் கல்விச் செயல்பாடுகளுக்கு வழங்கப்படும் தரநிலை மதிப்பெண். 3, 5 & 8-ம் வகுப்பு மாணவர்களிடம் நடத்தப்படும் மாதிரி (Randomly sampled) தேசிய அடைவுக் கணக்கெடுப்பு (NAS), UDISE, MDM Portal & MIS-ல் பதிவேற்றப்படும் தரவுகளின் அடிப்படையில்,
Learning Outcomes (LO)
Access (A)
Infrastructure & Facilities (IF)
Equity (E)
Governance Process (GP)
என்ற 5 தலைப்பின் கீழ் பிரிக்கப்பட்ட 96 கூறுகளுக்கு மொத்தமாக 1000 மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது.
அவ்வாறு பெறும் மதிப்பெண்களில்,
Level I (951 - 1000)
Level II (901 - 950)
Level III (851 - 900)
Level IV (801 - 850)
Level V (751 - 800)
Level VI (701 - 750)
Level VII (651 - 700)
Level VIII (601 - 650)
என்று 8 நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது. இதில், 1-ம் நிலைக்குள் எந்த மாநிலமும் வந்ததில்லை. 2-ம் நிலையில் இருந்த தமிழகம் 3-ம் நிலைக்கு வந்துவிட்டது என்பதே தற்போது விமர்சனப் பொருளாகி வழக்கம்போல ஆசிரியர்களைத் திட்டத் தொடங்கியுள்ளனர் பலாத்தோல் அறிவாளிகள் பலர்.
அதென்ன பலாத்தோல் அறிவாளி. . . .? பலாப்பழத்தின் வெளித்தோற்றத்தைப் பார்த்துவிட்டு அதன் உள்ளே ஒரே ஒரு பழம்தான் இருக்கிறது அதுவும் முட்களாகவே இருக்கிறது என்று அடித்துவிடும் அதீத அதிமேதாவிகள்தான் பலாத்தோல் அறிவாளிகள். Dont Judge the book by cover என்பர். இவர்களிடம் Dont Judge the Rank by Numbers என்றுதான் சொல்ல வேண்டும்.
சரி மேட்டருக்கு வருவோம். . .
மேலே பார்த்த 5 தலைப்புகளில், Learning Outcomes என்பது 3, 5 & 8-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவைச் சோதிப்பது. 1000-ல் இதற்கான மொத்த மதிப்பெண் 180.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் தமிழ்நாட்டின் பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகள் மூடப்பட்ட சூழலில், 01.11.2021-ல் பள்ளிகள் சுழற்சி முறையில் திறக்கப்பட அதிலிருந்து 4 / 5-ஆம் வேலைநாளான 12.11.2021-ல் மேற்படி வகுப்புகளுக்கான அடைவுச் சோதனை தேசிய அளவில் நடத்தப்பட்டது. தமிழ்நாடு இத்தலைப்பில் பெற்றுள்ளது 132/180 மதிப்பெண். இத்தலைப்பில் அதிக மதிப்பெண்ணான 168/180 பெற்றுள்ள ராஜஸ்தானில் 20.09.2021-லேயே பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன.
இத்தலைப்பில் மட்டுமே மதிப்பெண் குறையக் காரணமாக ஆசிரியர்களைச் சுட்டிக் காட்ட இயல்பான முகாந்தரம் உண்டு. என்றாலும், ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாததும் இதில் தாக்கம் ஏற்படுத்தும் காரணியே. அத்தகைய சூழலிலும் இத்தலைப்பிற்கான தேர்வின் வழியே புள்ளிவிரங்கள் சேகரிக்கப்பட்டு மதிப்பெண் அளிக்கப்பட்ட மற்றுமொரு தலைப்பான Equity-ல் கணிதம் & மொழிப் பாடங்களில் மாணவர்களின் செயல்பாடுகளுக்கு தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ள மதிப்பெண் 36/36. ஆம் 100%. சட்டீலயே இல்லேனு சொல்லீட்டு எப்புடிடா அகப்பைல 100% வந்தது என்று குழப்பம் வரலாம். வந்தால் வந்துட்டு போவுது. இதன் நீதி என்னனா ஆசிரியர்கள் திறம்பட கற்பித்துள்ளனர் என்பதே!
L.O தவிர்த்த மற்ற 4 தலைப்புகளில் மதிப்பெண் குறையக் காரணமான கூறுகள் 100% அரசின் நேரடிக் கல்விசார் நிருவாகச் செயல்பாடுகள் சார்ந்தவையே. கற்றல் கற்பித்தல் சார்ந்தவை அல்ல. இந்நான்கு தலைப்புகளில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் அளித்துள்ள மதிப்பெண்களை Level II-ல் புதிதாக இடம்பெற்றுள்ள குஜராத் & எப்போதும் இடம்பெறும் கேரள மாநிலங்களின் மதிப்பெண்களுடன் ஒப்பிட்ட போது தமிழ்நாட்டின் மதிப்பெண் குறைவுபட ஒன்றிய அரசின் NEP-ன் சில கூறுகளை அக்கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தாதது & முறையாக UDISE-ல் தகவல் ஏற்றப்படாது / ஏற்றிய தகவல்களைத் தவிர்த்திருப்பது தான் காரணமாக இருக்கக்கூடும் என்பதை அறியமுடிகிறது.
மதிப்பெண் குறைந்த கூறுகளின் பட்டியலும் மதிப்பெண்ணும் :
1. XI & XII-ல் தொழிற்பிரிவு பாடம் (2/10)
2. IX & X-ல் தொழிற்பிரிவு பாடம் (1/10)
3. IX சேர்ந்த SC & OBC மாணவரிடையேயான வித்தியாசம் (0/10)
4. IX சேர்ந்த ST & OBC மாணவரிடையேயான வித்தியாசம் (0/10)
5. IX சேர்ந்த Minority & OBC மாணவரிடையேயான வித்தியாசம் (0/20)
6. மாற்றுத்திறனாளி கழிப்பிடம் (4/10)
7. ஆசிரியர்களுக்கான Unique ID (2/10)
8. SCERT / DIET நியமனம் (6/10)
9. Primary School Inspection (2/4)
10. " " School Visit by CRC Co-ordinator (0/3)
11. " " School Visit by BRC/BEO (0/3)
இவற்றுள், 1, 2, 6, 7 & 8 கல்வித்துறையின் நேரடி நிருவாகக் கூறுகள். இதில் மதிப்பெண் வழங்காததற்கு ஆசிரியர்கள் காரணமல்ல. மேலும், 6 & 7 100% நடைமுறையில் உள்ளவையே.
3, 4, 5 கூறுகள் தவறுதலாக கணக்கெடுக்கப்பட்டிருக்கக்கூடும். ஏனென்றால், நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்வோரில் இடைநிற்றலே இல்லை எனும்போது இனவாரியான ஒப்பீட்டிலும் 100% தான் இருக்கும் என்பதால் 30/30 வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வழங்கப்படவில்லை. இதற்கும் ஆசிரியர்கள் காரணமல்ல.
9, 10 & 11 கூறுகள் உயர் அலுவலர்கள் ஆண்டிற்குக் குறைந்தது 3 முறை பள்ளியைப் பார்வையிட வேண்டும் என்பது. பார்வையிடல் குறையக் காரணம் கணக்கீட்டிற்குரிய கல்வியாண்டில் பள்ளி செயல்பட்ட நாள்களே குறைவு என்பது தான். இதற்கும் ஆசிரியர்களுக்கும் எந்தத்தொடர்புமில்லை என்று நான் சொல்லித்தான் புரியவேண்டும் என்பதில்லை.
தற்போதைய 2020-21 PGI வெளியீட்டின் உட்சபட்ச மதிப்பெண் 928 என்ற நிலையில், தமிழ்நாட்டிற்கு வழங்கியிருந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச நியாயமான மதிப்பெண் என்பது 855 + 8 + 4 + 40 = 907 - Level II. (கடந்த கணக்கீட்டு ஆண்டில் தமிழ்நாட்டின் மதிப்பெண் 906)
மொத்தத்தில் இவ்வாண்டிற்கான PGI தரநிலை குறைய ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் பணி எள் முனையளவும் காரணமல்ல என்பதோடே, கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கிலும் தமிழ்நாட்டின் கல்வித் தரமானது பலாத்தோல் அறிவாளிகள் பதறுவதுபோல தரந்தாழ்ந்து போகவில்லை என்பதே உண்மை.
பின் குறிப்பு :
நான் குறிப்பிட்டுள்ள பலாத்தோல் அறிவாளிகள் பெரும்பாலும் கல்வித்துறையைச் சார்ந்தவர்களே! இது குறித்து முன்னரே பயிற்சிகளில் பேசியுள்ளனர். இனிவரும் நாள்களிலும் உறுதியாகப் பேசுவர். அப்போது இப்பதிவு அவர்களுக்கும் மெய்ப்பொருளை உணர்த்தப் பயன்படும். தெளிந்தோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
_தரவுகள் :_
Performance Grading Index 2020-21
Livemint
News18 Tamil Nadu
Tamil The Hindu
#PGI #PGITamilnadu
No comments:
Post a Comment