வேறு கல்லூரிக்கு மாறிச் செல்லும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தை திருப்பி தராவிட்டால் அங்கீகாரம் ரத்து: பல்கலைக்கழக மானியக்குழு அதிரடி உத்தரவு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, November 5, 2022

வேறு கல்லூரிக்கு மாறிச் செல்லும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தை திருப்பி தராவிட்டால் அங்கீகாரம் ரத்து: பல்கலைக்கழக மானியக்குழு அதிரடி உத்தரவு

 

891571

ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து வேறொரு கல்வி நிறுவனத்திற்கு இடம்பெயர விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய முழு தொகையையும் தாமதமின்றி திருப்பித் தர வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், மதுரை காமராஜர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், வேலூர் திருவள்ளுவர் உள்ளிட்ட 22 மாநில பல்கலைக்கழகங்களும், 28 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், 232 தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளும், 560-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின்கீழ் செயல்பட்டு வருகின்றன.


இந்தியாவில் உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். தேசிய அளவில் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை 27 சதவீதம் என்ற அளவில் இருக்கும்போது, தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 54 சதவீதமாக இருந்து வருகிறது. தேசிய அளவில் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கையை 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்த மத்திய கல்வி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு (சியுஇடி) அண்மையில் நடைபெற்றது. இந்த நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் மாணவர் சேர்க்கையும் தாமதமானது. இந்நிலையில், மாணவர்கள் பலரும் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு விண்ணப்பித்தனர்.


இதனிடையே, பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவுகளை மீறி, சில பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களுக்கு இடம் பெயரும்போது அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பித் தர மறுத்து வருகின்றன. இது தொடர்பாக பல புகார்கள் நீதிமன்ற வழக்குகளின் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாகவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு தீவிரமாகப் பரிசீலித்தது. இதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், கல்லூரிமுதல்வர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர்ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:


எந்தவொரு கல்வி நிறுவனமும் பல்கலைக்கழக மானியக் குழுவின்வழிகாட்டுதல்களை மீறும் வகையில்,ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்துவெளியேறி வேறொரு கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தை, அசல் சான்றிதழ்களை தர மறுப்பது மானியக் குழுவின் கவனத்திற்கு தெரியவந்தால், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956, பிரிவு 12பி-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் பெற்றோர் அவதியுற்றதைக் கருத்தில் கொண்டு2021, ஜூலை 16-ல் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு மற்றும் கல்வியாண்டு தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் யுஜிசி வெளியிட்டது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தெரியும்.




எனவே, மாணவர் சேர்க்கையின்போது செலுத்தப்பட்ட நுழைவுக் கட்டணத்தை ரூ. 1,000-க்கு மிகாமல்கழித்து கொண்டு மீதித் தொகை முழுவதையும் மாணவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும். இல்லாவிட்டால், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மானிய நிதி பெறுவதற்கான தகுதியை இழக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படும். கல்லூரியாக இருந்தால் அந்த கல்லூரிக்கான பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அங்கீகாரம் ரத்து செய்யப்படும். நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக இருந்தால் அதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மாநிலப்பல்கலைக்கழகமாக இருந்தால் சம்பந்தப்பட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment