மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள் இன்று(செப்.,7) வெளியாகின்றன.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு, ஜூலை 17ல், நாடு முழுதும், 3,500 மையங்களில் நடந்தது.நாடு முழுதும், 9.5 லட்சம் மாணவியர் உட்பட, 16 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த, 15 ஆயிரம் பேர் உள்பட, 1.30 லட்சம் பேருக்கு மேல் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகளை, தேசிய தேர்வு முகமை இன்று அறிவிக்கிறது. தேர்வுக்கான விடைக்குறிப்பு மற்றும் மாணவரின் விடைத்தாள் நகல், கடந்த வாரமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
அதன் வாயிலாக, ஒவ்வொரு மாணவரும், தோராயமாக தங்களின் மதிப்பெண்களை தெரிந்துள்ளனர். இன்றைய தேர்வு முடிவில், ஒட்டுமொத்தமாக மாணவர்களின் தரவரிசை, மதிப்பெண் விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
-பள்ளிகள் அழைப்பு
அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வு எழுதிய மாணவர்களை, பள்ளிகளுக்கு வரவைத்து, அவர்களின் மதிப்பெண் விபரம் சேகரிக்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக உயர் கல்வி வழிகாட்டல் என்ற பெயரில், மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு புள்ளிவிபரம் சேகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்போது, மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கவும், '14417' மற்றும் '104' என்ற தொலைபேசி எண்கள் வழியாக, உளவியல் கவுன்சிலிங் அளிக்கவும், பள்ளிக் கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.
No comments:
Post a Comment