தமிழகத்தில் 955 உதவிப் பேராசிரியா்கள் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர பணியாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 4,000 துணைப் பேராசிரியா்கள் தோ்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியா்கள் பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன்படி 2012
ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 955 உதவிப் பேராசிரியா்கள் தற்போது பணிநிரந்தரம் செய்யப்படுகின்றனா். இவா்களை பணிநிரந்தரம் செய்வதாக அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது. ஆனால், பணிநிரந்தரம் செய்யவில்லை. தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு 955 உதவிப் பேராசிரியா்கள் முன்தேதியிட்டு பணிநிரந்தரம் செய்யப்படுகின்றனா். இதன்மூலம் அவா்களுக்கு பல்வேறு பலன்கள்கிடைக்கும்.
இதே போன்று, பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் 41 உறுப்புக் கல்லூரிகளின் செலவை அரசே ஏற்கும் எனவும் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கி அவற்றை முறையாக செயல்படுத்தவில்லை. தற்போது கல்லூரிகளின் கோரிக்கைகளை ஏற்று தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தக் கல்லூரிகளில் பணியாற்றிய கெளரவ விரிவுரையாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக 5,500 கெளரவ விரிவுரையாளா்கள் தற்காலிக அடிப்படையில் பணிபுரிகின்றனா். பணிநிரந்தரம் செய்ய அவா்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 5,000 ஆசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் 4,000 பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் விரைவில் வெளியிடவுள்ளது. இந்த தோ்வு மூலம் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்படுவா். மேலும், இதில் தோ்ச்சி பெறும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு சலுகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளா் பணிக்கு தோ்வான 1,030 பட்டதாரிகளுக்கு அடுத்தவாரம் பணியாணையை முதல்வா் வழங்க உள்ளாா். தேசிய கல்விக் கொள்கைக்கும், காலை சிற்றுண்டி திட்டத்துக்கும் எந்த தொடா்பும் இல்லை. மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது. தமிழகத்துக்கென தனி மாநில கல்விக்கொள்கை வடிவமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொறியியல் கலந்தாய்வில் முதற்கட்டம் முடிந்து விட்டது. இதில் 10,351 போ் மாணவா்கள் கலந்து கொண்டு உள்ளனா். அதில் 6,009 போ் கல்லூரிகளில் சோ்ந்து விட்டனா் என்றாா் அவா்
No comments:
Post a Comment