தமிழக பள்ளிக் கல்வி துறையில், கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக சீரமைப்பை ரத்து செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, நிதித் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் கீழ், 67 மாவட்ட கல்வி அலுவலகங்கள், வருவாய் மாவட்டத்துக்கு ஒரு முதன்மை கல்வி அலுவலகம் இருந்தன.தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ், 32 மாவட்ட கல்வி அலுவலகங்களும், 17 மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களும் தனியாக செயல்பட்டன.
கூடுதல் அதிகாரங்கள்
இந்நிலையில், நிர்வாக சீரமைப்பு நடவடிக்கையாக, நான்கு ஆண்டுகளுக்கு முன், தொடக்க கல்வி அலுவலகங்களும், மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களும் மூடப்பட்டு, அலுவலக பதவிகளும் கலைக்கப்பட்டன. அதற்கு பதில், ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. 67 ஆக இருந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள், 128 ஆக அதிகரிக்கப்பட்டன. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.
தொடக்க கல்வி இயக்குனரகத்தை, பள்ளிக் கல்வி இயக்குனரகத்துடன் இணைப்பது என்றும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., போன்ற அனைத்து வகை தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துக்கு, சுயநிதி பள்ளிகள் இயக்குனரகம் துவங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நிர்வாக சீரமைப்பு மீண்டும் மாற்றப்படுகிறது. இதன்படி அ.தி.மு.க., ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.
கல்வி துறை கடிதம்
முந்தைய நிர்வாக முறையை மீண்டும் அமல்படுத்த, கூடுதல் பணியாளர்கள், அலுவலர்கள் தேவை; இதற்கு நிதி செலவும் அதிகமாகும்.எனவே, கடந்த ஆட்சியில் நடந்த நிர்வாக சீரமைப்புகளை ரத்து செய்வதற்கு, நிதித் துறை அனுமதி அளிக்குமாறு, பள்ளிக் கல்வி துறை கடிதம் அளித்துள்ளது. இதுகுறித்து, இரு துறை அமைச்சர்களும் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளனர்
No comments:
Post a Comment