டெல்லி அரசு பள்ளி ஆசிரியர்கள் சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்த்த போது அவற்றில் 72 ஆசிரியர்களின் ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டதால், அதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு அந்தந்த மாநில தேர்வு வாரியங்கள் மூலமாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதற்காக அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, அவர்களின் சாதிச்சான்று, கல்வித் தகுதி, வயதுச் சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.
அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு சான்றிதழ்களின் உண்மைத்தன் மையை அறிவதற்காக 10 மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அந்த தேர்வை நடத்திய வாரியம் மூலமாகவும், பட்டப்படிப்பு சான்றிதழ்கள் பல்கலைக்கழக பதிவாளர் வழியாகவும் சரிபார்க்கப்படும். இதில் ஏதாவது போலி சான்றிதழ்கள் இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பல அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நீக்க நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்நிலையில், டெல்லியில் கடந்தாண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு அரசு பள்ளிகளில் பலர் ஆசிரியர்களாக பணி அமர்த்தப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களின் ஆவணங்களை சரிபார்த்தபோது சிலரது ஆவணங்கள் போலி என தெரியவந்ததால் 72 ஆசிரியர்களுக்கு அந்த மாநில கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில், “டெல்லி அரசின் கல்வித்துறை மூலம் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 72 பேரின் புகைப்படங்களும், பயோமெட்ரிக் விவரங்களும் உண்மையான ஆவணங்களும் முரண்பட்டு காணப்பட்டன.
அதனால், அவர்களுக்கு அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஆசிரியர் பணியில் தொடர முடியாது. அவர்கள் தங்கள் ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்த ஆவணங்களை சமர்ப்பித்த பிறகே அவர்களுக்கு ஆசிரியர் பணி மீண்டும் வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோல தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் போலி சான்றிதழ்கள் கொடுத்து 31 ஆண்டுகள் பணியாற்றி அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம் பட்டி அடுத்த சோபனூர் பகுதியைச் சேர்ந்த சுமதி (56), கடந்த 1991 ஜூன் 17-ம் தேதி, காவேரிபட்டணம் அடுத்த சாத்தனூர் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.
பின்னர் தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று பாறையூர், திம்மேநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றினார். இவரது பணி பதிவேட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு, பட்டயப்படிப்பு சான்றிதழ்களை முன்னிலைப்படுத்தி பதிவு செய்ய, பலமுறை அறிவுறுத்தியும், அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு தேர்வுகள் உதவி இயக்குனா் உரிய ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். அதில் தலைமை ஆசிரியை சுமதி, தனது 10-ம் வகுப்பு சான்றிதழில் திருத்தம் செய்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து துறை ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.
உயர் அதிகாரிகள் உத்தரவிட்டும், சுமதி தன் மீதான புகாரின் மீது உரிய விளக்கம் அளிக்காமல் தொடர் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார். இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், “இந்த ஆசிரியை அளித்த சான்றிதழை சரிபார்க்க இவ்வளவு காலம் எடுத்திருக்கக்
கூடாது. இதுபோல எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்களோ தெரியவில்லை. இவ்வாறு தகுதியில்லாத ஆசிரியர்களை அடையாளம் கண்டு பணிநீக்கம் செய்ய வேண்டும். இதில் அரசு சுணக்கம் காட்டக்கூடாது" என்றனர்
No comments:
Post a Comment