டெல்லி அரசியல் தகித்து வரும் நிலையில், தமிழகம் வர இருக்கிறார் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 'புதுமைப்பெண்' திட்ட தொடக்க விழாவில் பங்கேற்க அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. மேலும், 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இந்த மூன்று திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வருகிறார்.
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழக அரசால் மூன்று புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமான புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்களின் தொடக்க விழா நடைபெற உள்ளது. சென்னை பாரதி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
மாதிரி பள்ளிகள் திட்டம்
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தபோது, அரசு மாதிரிப் பள்ளியைப் பார்வையிட்டார். அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு, அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடம் கற்பிக்கப்படுவது பற்றி விளக்கப்பட்டது. மாணவர்களுடனும் கலந்துரையாடினார் ஸ்டாலின். அந்தப் பள்ளிகள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் பிடித்துப்போயின.
அன்றே சொன்ன முதல்வர்
இதையடுத்து, டெல்லியிலேயே செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், இதேபோல பள்ளிகளை தமிழ்நாட்டிலும் விரைவில் உருவாக்கப்போகிறோம். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதன் திறப்பு விழாவிற்கு கண்டிப்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அழைப்போம். அவர் வரவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
சிறப்பு விருந்தினர் கெஜ்ரிவால்
இந்த நிலையில் தான், இந்தப் பள்ளிகளின் திறப்பு விழாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைக்கப்பட்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் தெரிவித்த நிலையில், மரியாதை நிமித்தமாக அவரை இன்று நேரில் சென்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பிதழ் வழங்கினார்.
கெஜ்ரிவால் ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அதனைக் குறிப்பிட்டு, "தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்த ஸ்டாலினுக்கு நன்றி. கல்விப் புரட்சியை நோக்கிய பயணத்தில் தமிழக மக்களுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியயைகிறேன். செப்.,5 ஆம் தேதி ஒன்றிணைந்து 3 முக்கியமான திட்டங்களை தொடங்குவோம்" எனத் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment