ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமான உச்சவரம்பை அரசு ரூ.3 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
இந்த 2022-23-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சர், “தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்துக்கு தற்போது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயனடையும் வகையில், இந்த உச்சவரம்பு ரூ.3லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்படும்’’ என்று அறிவித்தார்.
இதைச் செயல்படுத்தும் வகையில், தாட்கோ மேலாண் இயக்குநர் அரசுக்கு அளித்த பரிந்துரையில், கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் ஆதிதிராவிடர் இனத்தவர் 18 சதவீதத்தில் இருந்து 21.10 சதவீதமாகவும், பழங்குடியினர் 8 லட்சம் என்ற அளவில் 1.01 சதவீதமாகவும் இருப்பதால், அவர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்து சமுதாய சமநிலை ஏற்பட உதவும் வகையில், தாட்கோவின் அனைத்து பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஆண்டு வருமான உச்சவரம்பை தற்போதுள்ள ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தலாம்.
இவ்வாறு உயர்த்துவது மத்திய அரசின் திட்டத்தில் உள்ள ஆண்டு உச்சவரம்புக்கு இணையாக இருக்கும். மேலும், கூடுதல் மக்கள் பயன்பெறுவார்கள். அரசுக்கு கூடுதல் நிதிச்சமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே ஆண்டு வருமான உச்சவரம்பை உயர்த்தி ஆணை வழங்கும்படி கேட்டிருந்தார்.
இந்த கருத்துரு அரசால் பரிசீலிக்கப்பட்டு, தாட்கோ மேலாண்மை இயக்குநரின் பரிந்துரைப்படி, தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது
No comments:
Post a Comment