சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு வரும் 17-ம் தேதி நடக்க உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், உயர்கல்வித் துறை செயலர் உள்ளிட்டஅதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தனியாரிடம் இருந்தபோது, 1,573 ஆசிரியர்கள், 4,277ஊழியர்கள் கூடுதலாக இருந்தனர். இத்தனை பேருடன் அந்த பல்கலைக்கழகம் 2013-ல் அரசுடமை ஆக்கப்பட்டது.
இதன் பிறகு, கூடுதலாக இருந்த ஆசிரியர்களில் 1,204பேர், மற்ற அரசு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டு, எஞ்சிய 369 பேர்அண்ணாமலை பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றுகின்றனர். ஊழியர்களில் 3,246 பேர் மற்ற கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டு, எஞ்சிய 1,031 பேர்அண்ணாமலை பல்கலைக்கழகத்திலேயே வேலை செய்கின்றனர்.
ரூ.1,000 முதல் ரூ.10,000 சம்பளத்தில் வேலை பார்க்கும் 417 தற்காலிக பணியாளர்கள் மாற்றப்படவில்லை. இவர்களுக்கு 3 மாத பணி நீட்டிப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டார். அவர்கள் மேலும் பணி நீட்டிப்பு கேட்டுள்ளனர்.
‘உயர்கல்வியில் வெளிநாட்டுமொழிகளையும் கற்றுத் தரவேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும்’ என்றுமுதல்வர் அறிவுறுத்தி உள்ளார். துணைவேந்தர்களுடன் கலந்துபேசி, ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் இதை அனைத்து கல்லூரிகளிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சமூக நீதி அடிப்படையில்தான் கலந்தாய்வு நடைபெறும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த ஆண்டு சேரும் மாணவர்கள் அந்த பாடத் திட்டத்தைதான் பின்பற்றுவார்கள்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு வரும் 17-ம் தேதி நடக்க உள்ளது. பல்கலைக்கழக பாடத் திட்டங்களில் உள்ள சில பிரச்சினைகள், அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களின் பணி, கல்லூரி கலந்தாய்வில் சமூக நீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டில் பின்பற்றும் நடைமுறைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment