தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்றுள்ளதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு டிச.8 முதல் 13-ம்தேதி வரை கணினி வழி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,148 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும்நிலையில், அதில் நூற்றுக்கணக்கான வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்றுள்ளதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் உள்ளதுபோல, கட்டாய தமிழ்த் தாள் தேர்வுக்கான அரசாணை, ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு இதுவரை வெளியிடப்படாததால், வெளி மாநிலங்களை சேர்ந்த பலரும் கடந்த ஆண்டில் நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் பங்கேற்றதாகஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா, குஜராத்மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற நிலையில், விரைவில் அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டு அவர்கள் பணியில் சேரும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசாணை வராததே காரணம்
இந்நிலையில், அனைத்து தேர்வுகளிலும் தமிழ்ப் பாடத் தாள் கட்டாயம் என்று அரசு அறிவித்தபோதும், அதற்கான அரசாணைகளை முறையாக வெளியிடாததாலேயே வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்திலும் அரசுப் பணியில் சேரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment