சென்னை: “சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக மிகவும் காலதாமதமாகிறது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிகமான பாதிப்பை உருவாக்கும். எனவே தேர்வு முடிவுகளை இம்மாதத்திற்குள் உடனடியாக வெளியிட்டு மாணவர்களின் சேர்க்கைக்கு உதவிட வேண்டும்” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக மிகவும் காலதாமதாகிறது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கு அதிகமான பாதிப்பை உருவாக்கும்.எனவே தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட்டு மாணவர்களின் சேர்க்கைக்கு உதவிட வேண்டும். இம்மாதத்திற்குள் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், அந்த மாணவர்கள் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்பே அறிவித்துள்ளபடி, ஜூலை 18-ம் தேதி கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும். தமிழகத்தில் சிபிஎஸ்இ தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது எனவே, இத்தேர்வு முடிவுகள் வெளியான பின்னர்தான், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியுள்ளனர். தமிழக முதல்வர் தமிழ்நாட்டிற்கென்று மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைத்து, அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் ஆளுநர், மத்திய இணை அமைச்சர் இருவரும் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியுள்ளனர்.
மாணவர்களிடம் சென்று அதுகுறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை.மாநில அரசு மற்றும் மக்கள் எண்ணங்களை புரிந்துகொண்டு ஆளுநர் செயல்பட வேண்டும். மாநில கல்விக் கொள்கையை ஆளுநர் ஆதரிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment