நிரந்தர ஆசிரியர் நியமன அறிவிப்பு வெளியாகுமா? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, July 5, 2022

நிரந்தர ஆசிரியர் நியமன அறிவிப்பு வெளியாகுமா?

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.


 அதில், "கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால், அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களே. அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போதுவரை பணி வாய்ப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும். அதோடு ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி வாய்ப்பை பெற இயலாத நிலை உருவாகும்.


ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பாக கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்வதோடு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் தமிழக அரசுப் பள்ளிகளிலுள்ள காலி பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.


 


இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரி நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு தமிழக அரசுத்தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதில் "தமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மதுரைக் கிளையின் இடைக்கால தடையால் அதன் கீழ் உள்ள மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாமல் உள்ளது. ஆகவே இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.


அதற்கு நீதிபதி, "எந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்?" எனக் கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில், "ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தகுதியான ஆசிரியர்களே நியமிக்கப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "அப்படி என்றால் நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே? தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு என்ன அவசரம் உள்ளது?" எனக் கேள்வி எழுப்பி, வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.


இதனால் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி நிரந்தர ஆசிரியர் நியமன அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுமா ? என்று தேர்வர்கள் எதிர்நோக்கியுள்ளனர்

No comments:

Post a Comment