இடைக்கால ஆசிரியர் நியமனம்: ஒரு பார்வை-- சாதகங்கள் பாதகங்கள் கட்டுரை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, July 1, 2022

இடைக்கால ஆசிரியர் நியமனம்: ஒரு பார்வை-- சாதகங்கள் பாதகங்கள் கட்டுரை

download%20(17)

அண்மையில், தமிழ்நாடு அரசு, 13,331 ஆசிரியர்களை இடைக்காலமாக நியமிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

 தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தற்போது 4,989 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடமும் 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடமும் 3,188 முதுகலை ஆசிரியர்கள் பணியிடமும் காலியாக உள்ளன. மொத்தம் 13,331 காலிப் பணியிடங்கள். இந்தப் பணியிடங்களில் இடைக்கால ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையில் 7.9-இல் குறிப்பிட்டுள்ள அம்சம்தான் இது.

 இடைக்கால ஆசிரியர் பணி நியமனத்தின்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஜூலை 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான 10 மாதங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஜூலை 2022 தொடங்கி பிப்ரவரி 2023 வரையிலான எட்டு மாதங்களும் பணியாற்ற உள்ளனர். இந்த பணிக்காலமும் நிரந்தரமில்லை என்பதுதான் உச்சக்கட்ட சோகம். காலிப்பணியிடத்துக்கு கல்வித்துறை நிரந்தர ஆசிரியரை நியமித்துவிட்டால், இடைக்காலமாக பணியாற்ற வந்தவர் வெளியேற்றப்படுவார். இதுதான் அரசு உத்தரவு.

 அந்தந்த பள்ளி அருகில் உள்ள தகுதி வாய்ந்த நபர்களை இடைக்கால ஆசிரியர்களாக நியமித்துக்கொள்ள பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இவர்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 என மதிப்பூதியம் வழங்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 அரசு விதிப்படி, "டெட்' எனப்படும் தகுதித் தேர்விலும் போட்டித் தேர்விலும் தேர்ச்சி பெற்ற ஒருவரால்தான் ஆசிரியர் பணி பெற முடியும். ஆனால், இடைக்கால ஆசிரியர் நியமனத்துக்கான உத்தரவில், டெட் தேர்ச்சி கட்டாயம் என்று கூறப்படவில்லை. மாறாக, ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரு பணியிடத்தை நாடும்போது, டெட் தேர்ச்சி பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இல்லையெனில், "இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலருக்கு முன்னுரிமை தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.


அரசின் இந்த உத்தரவுப்படி, இடைக்கால ஆசிரியர்களுக்கான தகுதி, பட்டப்படிப்பு மட்டுமே. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களும் பட்டப்படிப்பு படித்தவர்கள்தான். அவர்கள் ஆசிரியருக்கான தகுதி பெற்றவர்கள் இல்லை. முறையான தகுதி பெறாத ஒருவரால், 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க முடியுமா?

 இடைக்கால ஆசிரியருக்கு தகுதி தேவையில்லை என அரசு நினைக்கிறதா? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுக்க இந்தத் தகுதி போதுமென அரசு கருதுகிறதா? அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் கல்வித்துறையே அக்கறையற்று இருப்பதை ஏற்க இயலாது.

 இடைக்காலமாக நியமிக்கப்பட உள்ள 13,331 பேரில், 90 சதவிகிதத்தினர் கற்பித்தலில் அனுபவம் இல்லாதவர்களாகவே இருப்பார்கள். மாணவர்களுக்குப் புரியும்படி கற்பித்தல் ஒரு கலை. அனுபவமில்லாதவர்களுக்கு எளிதில் அது கைவராது. அவர்கள் மாணவர்களுடன் பழகி, அவர்களது உளவியலை உள்வாங்கிட இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகிவிடும். எஞ்சிய சில மாதங்களில் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.


13,331 பேருக்கும் சொற்பத் தொகையை கொடுத்து, அவர்களது சேவையை எட்டு முதல் பத்து மாதங்களுக்கு பயன்படுத்திக் கொண்டுவிட்டு அவர்களைத் திருப்பி அனுப்புவது உழைப்புச் சுரண்டல் ஆகாதா?

 விலைவாசி உயர்ந்துவிட்ட இன்றைய சூழலில், மாதம் ரூ.7,500 என்பது எப்படி போதுமானதாக இருக்கும்? அரசின் இந்த நகர்வு, எண்ணிக்கையை பெருக்குவதற்கானதாக மட்டுமே இருக்கும். எட்டே மாதத்தில், புதிதாக வரும் ஒரு ஆசிரியரால் மாணவர்களை முழுவதுமாக புரிந்துகொண்டு அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியுமா? உளவியல் ரீதியாக இது சாத்தியமா?


2013, 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கை எண். 177-இல் குறிப்பிடப்பட்டிருந்தது. காலிப்பணியிடங்கள் இல்லை என்பதைக் காட்ட இடைக்கால ஆசிரியர் நியமனத்தில் அக்கறை காட்டும் பள்ளிக்கல்வித்துறை, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் பாராமுகமாக இருப்பது ஏனோ?

 நிலைமை இப்படியிருக்க, பத்து மாதங்களுக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்படும் 13,331 பேருக்கு அரசு எந்த வகையில் முன்னுரிமை தரப்போகிறது? வழக்கமான பணி நியமனத்தில் இவர்களுக்கு சலுகை தரப்படுமா? மேலும், பள்ளி மேலாண்மைக் குழுதான் ஆசிரியர்களைத் தேர்வு செய்யப்போகிறது. இதில் அரசியல் தலையீடோ, பணப் பரிவர்த்தனையோ இருக்காது என்பதை அரசால் அறுதியிட்டுக் கூற முடியுமா?

 அக்னிபத் திட்டத்தை எதிர்க்கும் திமுக, "லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவப்பணி லட்சியத்தைச் சிதைக்கும் அக்னிபத் எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்' என்று கூறுகிறது. லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவப் பணி லட்சியத்தை அக்னிபத் திட்டம் சிதைக்கும் என்றால், இடைக்கால ஆசிரியர் நியமனம், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஆசிரியர் பணி லட்சியத்தை சிதைக்காதா?

 டெட் தகுதி தேவைப்படாத சிறப்பு ஆசிரியர்கள் 11,000 பேரை தமிழக அரசு இடைக்காலமாத்தான் நியமனம் செய்தது. பணி நியமனம் கோரி அவர்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், கோரிக்கையை பரிசீலிப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது. இதே மனநிலையோடு தற்காலிக ஆசிரியர்களும் பணியில் சேரலாம். தற்போது பணிபுரிந்துவரும் வேலையைக் கூட உதறிவிட்டு, நிரந்தர ஆசிரியராகிவிடலாம் என்ற நப்பாசையில் சிலர் பணியில் சேரலாம்.


 ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கல்வித்துறை மீண்டுமொரு அசாதாரண சூழலையே ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment