2021-22 பொதுமாறுதல் கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்களின் மாவட்ட மாறுதல் கலந்தாய்விற்கு மட்டும் எவ்வித அரசாணை வழிகாட்டலும் இன்றி Station Seniority-க்குப் பதிலாக Appointment Seniority-படி முன்னுரிமை தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த முறையற்ற நடைமுறையால், 2618 இ.நி.ஆ-கள் தமது நியாயமான முன்னுரிமை வரிசை எண்ணிலிருந்து இறக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஒரு ஆசிரியை 1341 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்பது மொத்தம் விண்ணப்பித்தோரில் 61% ஆகும்.
ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர் பணியேற்ற வருடத்தின் அடிப்படையில் பாதிப்பு உள்ளது. குறிப்பாக 2009-க்குப் பின் பணியேற்ற இ.நி. ஆசிரியர்கள் ஊதியத்தைப் போலவே தற்போது மாவட்ட மாறுதலிலும் பெருமளவில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
அதே போன்று பல்வேறு இன்னல்களோடே Station Seniority-க்காக ஒரே பள்ளியில் 15 வருடங்களுக்கும் மேல் காத்திருந்தோறும் முன்னுரிமையை இழந்துள்ளனர்.
பெரும்பாலான ஆசிரியர் இயக்கங்கள் மாவட்டத்திற்குள்ளான மாறுதல்களில் செலுத்தும் கவனத்தில் 1% கூட மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் மாறுதல் கலந்தாய்வுகளில் கவனம் செலுத்துவதில்லை. (விதிவிலக்காக ஒன்றிரண்டு இடங்களில் இறுதிவரை உடனிருக்கும் இயக்கப் பொறுப்பாளர்களும் உண்டு.)
இத்தகைய சூழலில், தற்போதைய உரிமைப் பறிப்பை எதிர்த்து மாவட்ட மாறுதலில் இ.நி.ஆசிரியருக்கான உரிமையைப் பெற்றுத்தர எந்தவொரு ஆசிரியர் சங்கமும் முன்வரவில்லை என்பதைவிட, இதுகுறித்த கேள்வியை எழுப்பக்கூட பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களே தயாராக இல்லை என்பதே வருந்தத்தக்க நிகழ்வாக உள்ளது. இறுதிநேர மாற்றம் என்பதால் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இது குறித்த விவரமே சரிவரத் தெரியவில்லை.
(Station Seniority-யைத் தவிர்த்துவிட்டு Appointment Seniority-படி முன்னுரிமை தயாரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள விளைவுகளை அறிந்து தெளிய மாதிரி ஒப்பீட்டு Excel File இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்களின் பாதிப்பை நீங்களே அறிந்துகொள்ளலாம்.)
இனிவரும் ஆண்டுகளில் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும். குறைந்தது ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, முன்னரே மாறுதல் பெற்றோர் மீண்டும் விண்ணப்பித்து முன்னுரிமை பெற முடியும் என்பதால், பிந்தினோர் பிந்தினோராகவே இருக்க 99.9% வாய்ப்புள்ளது. எனவே, அநேகருக்குச் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பும் கனவு இனி பகல் கனவே.
"போச்சா. . . ஒடம்புல உள்ளங்கை ஒன்னுதேன் வெள்ளையா இருந்துச்சு. அதுவும் போச்சா" என்ற வடிவேலுவின் நகைச்சுவையைப் போலத்தான் *உள்ளது ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்களின் நிலை இழிவு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இழிவு நிலைக்குள்ளாக்கப்பட்ட ஆசிரியர்களில் ஒருவன்
✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
No comments:
Post a Comment