தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.சராசரியாக அரசுப் பள்ளிகளில் நுழையும் போது நான்கில் ஒரு மாணவர் வளர்ச்சிக் குறைபாடு கொண்டவராகவும், 2ல் ஒரு மாணவர் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவராக இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் உடல்நலத்தையும், கல்வி திறனையும் ஒருங்கே மேம்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பதை கல்வியாளர்கள் அறிவுறுத்தினர்.இதனால் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் எண்ணறிவு, எழுத்தறிவு பெறுவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை தடுக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் சிற்றுண்டி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை அண்மையில் வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் சிற்றுண்டி திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை சுய உதவிக்குழுக்கள் மூலம் சமைத்து சிற்றுண்டி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும், 10 முதல் 600 குழந்தைகளுக்கு தேவையான உணவு தினமும் தயாரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் காலை 7.45 மணிக்குள் சமையல் பணிகள் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பள்ளிகள் மாணவர்கள் சோர்வுடன் இருக்க மாட்டார்கள் எனவும், மாணவர்கள் உடல் மற்றும் மனதளவில் வலிமையாக காணப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment