தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக சட்டமன்றத்தில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “அரசு பள்ளிகளில் 6 – 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் அவர்கள் படிப்பை முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ.1000 வழங்கப்படும்.” என்றார். அத்துடன், நடப்பாண்டில் இருந்தே, அரசு பள்ளியில் இருந்து கல்லுாரிகளுக்கு சென்று முதல், இரண்டு, மூன்றாவது ஆண்டு படிக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவிகளிடம் இருந்து சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை அண்மையில் உத்தரவிட்டது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றதற்கான சான்று, கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மாணவிகளுக்கு ரூ.1000:
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? யார் தகுதி பெற்றவர்கள்?
மேலும், இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும், இளங்கலை / தொழிற்கல்வி/ மருத்துவக் கல்வியில் 2ஆம் ஆண்டு முதல் 5ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யவும் மாணவிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த நிலையில், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்கு தேவையான தெளிவுரைகள் / கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம். இந்த திட்டத்தை ஜூலை 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment