மரங்களில் விழிப்புணர்வு ஓவியங்களை வரையும் அரசு பள்ளி நுண்கலை ஆசிரியர் அன்பு. புதுச்சேரி : மரங்களில் ஓவியங்கள் தீட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் புதுச்சேரியை சேர்ந்த அரசுப் பள்ளி நுண் கலை ஆசிரியர் அன்பு. முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த அன்பு, தற்போது தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நுண்கலை ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ‘இயற்கையை காப்போம், வன விலங்குகளை பாதுகாப்போம், மரங்களை வெட்டாதீர்’ என்ற கருப்பொருளைக் கொண்டு மரங்களில் வித்தியாசமான முறையில் ஓவியம் தீட்டி வருகிறார். ஏற்கெனவே 3டி ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்த அன்புவின் இந்த முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது. இதுதொடர்பாக நுண்கலை ஆசிரியர் அன்பு கூறியதாவது: எனது சகோதரர் குமார் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வீணாகும் பொருட்களை கொண்டு ஓவியம் வரைவதில் புகழ்பெற்றவர். அவருடன் இணைந்து பல்வேறு ஓவியங்களை தீட்டியுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோ ஆர்ட்வரைந்து 3 முறை ‘அசிஸ்ட் வோர்ல்ட் ரெக்கார்ட்’ படைத்துள்ளேன்.
பள்ளியில்மாணவர்களை பல்வேறு ஓவியப்போட்டிகளுக்கு தயார் செய்து, அவர்களை மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்து ஊக்கப்படுத்தி வருகிறேன். கடந்த ஓராண்டுக்கு முன்பு யூடியூப் சேனல்களை பார்த்துக்கொண்டிந்தபோது, வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மரங்களில் வனவிலங்குகளின் ஓவியங்களை வரைவதை கண்டேன். அதன்பிறகு இயற்கை சார்ந்த விழிப்புணர்வு ஓவியங்களை மரங்களில் தீட்ட வேண்டும் என்று எண்ணினேன். தற்போது எங்கள் பள்ளியில் ‘இயற்கையை காப்போம், வன விலங்குகளை பாதுகாப்போம், மரங்களை வெட்டாதீர்’ என்ற கருவை மையமாக கொண்டு 3 மரங்களில் ஓவியங்கள் வரைந்துள்ளேன். ‘ட்ரீ இல்லூஷன்’ முறையில் இந்த ஓவி யங்கள் வரையப்பட்டுள்ளன. மரத்தில் ஸ்டிக்கர் ஒட்டி அதன் மீது அக்ரிலிக் பெயிண்டால் ஓவியத்தை தீட்டி வருகிறேன். இதனால் மரங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மரங்களில் ஓவியங்கள் வரைய முக்கிய காரணம் எளிதாக, மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் என்பதுதான். சாதாரணமாக ஒரு மரத்தை பார்த்தால்,அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம். அதுவே அதில் ஒரு வித்தியாசமான ஓவியம் இருந்தால் அதனை உற்றுநோக்குவோம். அத்தகைய கவனத்தை ஈர்த்து, எளிதாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன். இந்த முயற்சிக்கு எங்கள் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் தான் ஊக்கம் அளித்தனர். தற்போது கண்தானத்தை வலியுறுத்தி தவளக்குப்பத்தில் உள்ள கண் மருத்துவமனையில் ஓவியம் வரைய அழைப்பு விடுத்துள்ளனர். புதுச்சேரி அரசுப் பள்ளிகள் அனைத்திலும் இதுபோன்ற ஓவியங்கள் வரைய ஆர்வமாக உள்ளேன். பாரதி பூங்கா, தாவரவியல் பூங்காவில் ஏராளமான மரங்கள் உள்ளன. இதில் இயற்கையை காக்க விழிப்புணர்வு ஓவியங்கள் வரைய ஆர்வமாக உள்ளேன்’’ என்றார்.
No comments:
Post a Comment