புதுச்சேரி: அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகப் பாடத்திட்டத்துக்கு பதிலாக புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் 6-ம் வகுப்பு முதல் தொடங்க வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. 2011-ல் என்ஆர்காங், அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. 2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ., பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சிபிஎஸ்இ, பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. இவ்வாறு கடந்த 2018-19 கல்வி ஆண்டில் 5-ம் வகுப்பிற்கும் சிபிஎஸ்இ, பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 6-ம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ, பாடத் திட்டம் விரிவாக்கப்படவில்லை.
இதனால், 5-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தில் படித்து வந்த மாணவர்கள் வேறு வழியின்றி 6-ம் வகுப்பில் இருந்து தமிழக பாடத் திட்டத்தை படித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போதைய அரசு, 6-ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரைக்கும் சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே கல்வி முறையான புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியிலும் புதியக் கல்விக்கொள்கை அமலாகவுள்ளது. ஆனால் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக உள்ளது. இதனால், மத்திய அரசின் சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்திட புதுவை அரசு முடிவு செய்துள்ளது.அதனையொட்டி, இந்த கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பில் சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி கேட்டு, புதுவை பள்ளிக் கல்வித்துறை சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு விண்ணப்பித்தது. குஜராத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை குறித்த அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநிலத்தில் சிபிஎஸ்இ, பாடத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார்.
இது பற்றி கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: “சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பெற்றுள்ளோம். அதனை அமல்படுத்த முடிவு எடுத்துள்ளோம். கட்டமைப்புகளை மேம்படுத்தி, வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்திய பிறகே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் கிடைக்கும்.
வரும் கல்வியாண்டில் இப்பணிகள் நிறைவடைய சாத்தியமில்லை. தற்போது இப்பணிகளை ஓராண்டுக்குள் நிறைவு செய்து அடுத்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கைகளை விரைவு படுத்தியுள்ளது. அடுத்தக் கல்வியாண்டில் புதுச்சேரி முழுக்க பாடத்திட்டம் சிபிஎஸ்இ-யாக மாற அதிக வாய்ப்புண்டு” என்று கூறினர்.
No comments:
Post a Comment