'அரசு பள்ளி ஆசிரியர்களால், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை செம்மையாக நடத்த முடியவில்லை. மேலும், 9,000 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், எல்.கே.ஜி., வகுப்புகளை நடத்தவில்லை' என, தொடக்கக் கல்வி இயக்குனரகம் அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்பட்ட, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் மூடப்பட்டு, அதில் பணியாற்றிய ஆசிரியர்கள், மற்ற பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுஉள்ளனர். இதனால், பொருளாதாரத்தில் நலிந்த கிராமப்புற குழந்தைகள், ஆங்கில வழியில் கே.ஜி., வகுப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தொடக்க கல்வி இயக்குனரகம், அரசுக்கு நேற்று அளித்துள்ள விளக்கம்: தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ், 22 ஆயிரத்து 831 அரசு தொடக்க பள்ளிகள்; 6,587 நடுநிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 23.40 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்; 69 ஆயிரத்து 640 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
புரிதல் இன்மை
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், எட்டு ஆண்டுகளாக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், 4,863 காலியிடங்கள் ஏற்பட்டன. இதனால், தேசிய அளவிலான ஆய்வில், தமிழகம் 27ம் இடத்தில் பின் தங்கியுள்ளது. மேலும், 3,800 அரசு தொடக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்த ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில், இந்த ஓராசிரியர் பள்ளிகள் அதிகம் உள்ளன.மாநிலம் முழுதும் சமூக நலத்துறையின் கீழ், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன.அவற்றில், அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி வளாகங்களில் செயல்படும், 2,381 மையங்களில், 2018 டிசம்பரில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டன.இந்த வகுப்புகளில் சேர்ந்த, 53 ஆயிரம் மாணவர்களுக்கு, தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களே பாடம் நடத்தினர். இந்த ஆசிரியர்கள், மழலையர் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளை கையாள்வதில் சிக்கல்களும், புரிதல் இன்மையும் ஏற்பட்டன. அவர்கள் வகுப்புகளை செம்மையாக கையாளவில்லை.
அதிர்ச்சி
கடந்த ஆண்டில் மட்டும், அரசு தொடக்க பள்ளிகளில், 2.8 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இதன்படி பார்த்தால், 4,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூடுதலாக தேவை. ஏற்கனவே உள்ள காலியிடங்களையும் சேர்த்தால் 9,000 ஆசிரியர்கள் தேவை.எனவே, தொடக்க கல்வியின் தரம் குறையும் வாய்ப்புள்ளதால், எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,க்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடக்க பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் தொடக்க கல்வி துறை மாணவர்களை சேர்க்கவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள கிராமத்து மாணவர்கள் கல்வி தரத்தை உயர்த்தும் அளவுக்கு, திறன்கள் நிறைந்த அரசு பள்ளி ஆசிரியர்களால், எல்.கே.ஜி., வகுப்பை நடத்த முடியவில்லையா என, பெற்றோரும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்து ள்ளனர். இந்த பிரச்னையை விரிவாக விவாதிக்க, அரசு குழு அமைக்கப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன
No comments:
Post a Comment