தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் மாணவி துர்கா. முதல் மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள் குடும்பத்தினர் உடன் படித்த நண்பர்கள் அனைவரும் ஊக்கப்படுத்தியதாக மாணவி கூறியுள்ளார்.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 10ம் வகுப்பில் 4,52,499 மாணவிகளும் 4,60,120 மாணவர்களும் 3ம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.8% பேரும் மாணவிகள் 94.38% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய 9.12 லட்சம் மாணவ மாணவிகளில் தமிழ் பாடத்தில் ஒரே ஒரு மாணவி 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.தமிழை ரசித்து ருசித்து படித்திருக்கிறார் அந்த மாணவி. அவர் திருச்செந்தூர் அருகே உள்ள காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தவர். துர்கா என்ற அந்த மாணவி 500க்கு 448 மதிப்பெண் பெற்றுள்ளார். இதில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவியின் தந்தை ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். மாணவியை பள்ளி ஆசிரியர்கள், குடும்பத்தினர் பாராட்டினர், பின்னர் மாணவிக்கு பள்ளி முதன்மை முதல்வர் செல்வ வைஷ்ணவி பரிசு கோப்பை வழங்கினார்.இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாணவி துர்கா, முதல் மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள் குடும்பத்தினர் உடன் படித்த நண்பர்கள் அனைவரும் ஊக்கப்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.ஆங்கில வழி கல்வியில் பயின்ற மாணவி தமிழ் பாடத்தில் முதல் இடம் பெற்றிருப்பது தனி சிறப்பை பெற்றுள்ளது. தேர்வெழுதிய 9,12,620 மாணவர்களில் ஒரே ஒரு மாணவி மட்டும் மொழித் தேர்வில் நூறு மதிப்பெண் பெற்ற துர்காவுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அளித்து பாராட்ட வேண்டும் என்று பலரும் சமூக ஊடகங்களில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment