தமிழகத்தில், 600 தொடக்கப் பள்ளிகளில் தலா 10 மாணவர்கள் மட்டுமே உள்ளதால், அவற்றை மூடும் அபாயம் உள்ளதாக, ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், புதிய கல்வி ஆண்டில் பணியாற்ற வேண்டியது குறித்து, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், துணை இயக்குனர்கள் ஆஞ்சலோ இருதயசாமி, வெற்றிச்செல்வி ஆகியோரும், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அப்போது, அதிகாரிகள் விடுத்த வேண்டுகோள்: அரசு தொடக்கப் பள்ளிகளில் நாளுக்கு நாள் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஆசிரியர்கள், கட்டமைப்புகள் இருந்தும், 22 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை; 600 தொடக்கப் பள்ளிகளில், தலா 10 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இதே நிலை நீடித்தால், பள்ளிகளை மூட வேண்டிய அபாயம் ஏற்படும்.இதை தடுக்க, தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்.
வரும் 14ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை தொடர்பாக அமைச்சர்கள் பங்கேற்கும் பேரணிகளை, மாவட்ட அளவில் நடத்த வேண்டும்.தேசிய அளவில் நடத்தப்பட்ட கல்வித் தரத் தேர்வில், தமிழகம் 27ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை முன்னேற்ற வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.
No comments:
Post a Comment