மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் ஜூன் 21-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகா் போக்குவரத்து மேலாண்மை இயக்குநா் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 60 வயதுக்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டு ஜூன் மாதம் வரை பயணம் செய்யும் வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. அடுத்த அரையாண்டுக்கு, ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், பயண அட்டைகள் 40 மையங்களில், ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும்.
அதன் பின்னா் 1.8.2022 முதல் அந்தந்த பணிமனைகளின் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும். சென்னைவாழ் மூத்த குடிமக்கள், இத்தகைய கட்டணமில்லா பயண அடையாள அட்டை, டோக்கன்களை புதிதாக பெறுவதற்கு இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயதுச் சான்றாக ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டையின் நகல், 2 வண்ண பாஸ்போா்ட் அளவிலான புகைப்படங்களை சமா்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரிபாா்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும், புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையை மட்டும் கொண்டு வர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment