தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டத்தில் இன்று மட்டும் 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதற்கு ஜூன் 30 வரை சிறப்பு முகாம் நடைபெறும் நிலையில் விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் இந்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது.ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டு மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
திட்டத்தின் அம்சம் என்ன?
இத்திட்டத்தின் கீழ் 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விண்ணப்பம் செய்ய அழைப்பு
இத்திட்டத்துக்கு தகுதியான மாணவிகளிடம் உரிய சான்றிதழ்களை பெற்று விண்ணப்பம் செய்ய வேண்டும் என கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதற்கான வழிமுறைகளையும் உயர் கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. அதன்படி இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவிகள் கல்லூரி வழியாக அல்லது இணையதளத்தின் மூலமாக நேரடியாக பதிவு செய்யலாம்.
ஆவணங்கள் என்னென்ன?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவிகள் தங்களின் ஆதார், வங்கி கணக்கு புத்தகம், 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பள்ளி மாற்று சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டும். அதன்பிறகு பரிசீலனைக்கு பிறகு தகுதியான மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல் உதவித்தொகை வழங்கப்படும்.
ஒரே நாளில் 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்
இத்திட்டத்துக்காக ஜூன் 25 முதல் ஜூன் 30ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சிறப்பு முகாம்கள் நடந்தது. முதல் நாளான இன்று மட்டும் 15 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிற உதவித்தொகைகளை மாணவிகள் பெற்றாலும் கூட இத்திட்டத்திலும் அவர்கள் பயன்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment