
சென்னை, நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தேசிய தர நிர்ணயக் குழுவால் A தகுதி பெற்றமைக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறந்த பேராசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். உடன், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தலைவர் மூஸா ரஸா, முதல்வர் ஷானாஸ் அகமது, துணை முதல்வர் அம்துல் அஜீஸ், கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர். சென்னை: திறன்மிக்க கல்லூரி மாணவ, மாணவிகளை உருவாக்கவே ‘நான் முதல்வன்’ திட்டத்தை அறிவித்துள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி (எஸ்ஐஇடி), தேசிய தர நிர்ணயக் குழுவின் ‘A ’ தகுதி பெற்றுள்ளது. இதற்கான பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: இந்த கல்லூரி, தென்னிந்திய கல்வி அறக்கட்டளையின்கீழ் (Southern Indian Educational Institution- SIET) ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரிக்கு நான் வருவது புதிதல்ல. ஒவ்வொரு தேர்தலின்போதும் இங்கு வந்துதான் வாக்களிக்கிறேன். சென்னையில் ஆண்களுக்கு நிறைய கல்லூரிகள் இருந்தாலும், பெண்களுக்கென ஒரு கல்லூரி வேண்டும் என்ற மனஉறுதியுடன் இந்த கல்லூரியை ஆரம்பித்தவர்தான் நீதிபதி பஷீர் அகமது. கடந்த 1955-ல் அன்றைய பிரதமர் நேருவை அழைத்து அடிக்கல் நாட்டி உருவாக்கப்பட்டது. தேசிய தர நிர்ணயக் குழுவால், A தரம் கொடுக்கப்பட்டுள்ளது, இக்கல்லூரியின் வெற்றிப்பாதையில் முக்கியமான மைல்கல்லாகும். இது, மறைந்த நீதிபதி பஷீர் அகமதுவின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றியாகும். கல்லூரியின் தற்போதைய தலைவர் மூஸா ரஸா, மறைந்த நீதிபதி பஷீர் அகமதுவின் மகனும் தாளாளருமான பைசூர் ரகுமான், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான வெற்றியாக அமைந்துள்ளது. கடந்த 1955-ல் 173 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் தற்போது 7,500 மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில் 50 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். மீதியுள்ள 50 சதவீதத்தினர் அனைத்து மதங்களையும் சார்ந்திருக்கும் மாணவிகள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவிகள் இங்கே அதிக அளவில் படிக்கின்றனர். மதச்சார்பின்மையின் மறுஉருவமாக இந்தக் கல்லூரி திகழ்வது தனிச்சிறப்பாகும். திறன்மிக்க கல்லூரி மாணவ, மாணவிகளை உருவாக்கவே ‘நான் முதல்வன்’ திட்டத்தை அறிவித்து நிறைவேற்றுகிறோம். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பெண்கள் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி, அவை இன்றும் வரலாற்றில் பேசப்படுகின்றன. பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் சுயஉதவிக் குழு திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1989-ம் ஆண்டு கொண்டுவந்தார். அதே வழிநின்று, பெண்களுக்கு உயர்கல்வி வழங்கியே தீரவேண்டும் என்ற நோக்கில், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுகிறோம். அரசைப் போலவே, இக்கல்லூரியும் பெண்களின் கல்வி உரிமைக்காக பணியாற்றுகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, கல்லூரி முதல்வர் ஷானாஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment