புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கி, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற அரசு ஊழியர்களது நெடுநாள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதியமைச்சர் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து ஆட்சியைப் பிடித்த திமுக, தற்போது அதனை நிறைவேற்ற முடியாது என்று கைவிரிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் மற்றும் அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்’ எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு அதுவரை கிடைத்துவந்த பணிக்கொடை, ஓய்வூதியம் என்று எதுவும் முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு மாறாக, பணியின்போது அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும், அவர்கள் ஓய்வு பெற்றதும் திருப்பி வழங்கப்படும் என்றும் அன்றைய அதிமுக அரசு அறிவித்தது.
ஆனால், தொடக்கம் முதலே இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர். அரசு ஊழியர்களின் 13 ஆண்டுக்காலப் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2016 ஆண்டு ஏப்ரல் மாதம் அன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைத்தார். அக்குழு அமைக்கப்பட்ட 4 மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் அளிக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மூன்று ஆண்டுகால நீண்ட தாமதத்திற்குப் பிறகு வல்லுநர் குழு தனது ஆய்வு அறிக்கையைக் கடந்த 2018 ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி அரசிடம் அளித்தது. ஆனால் எடப்பாடி. பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, வல்லுநர் குழு அறிக்கையை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வல்லுநர் குழு அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து வேறு வழியின்றி, 2019 ஜனவரி மாதம் அறிக்கையை வெளியிட்ட தமிழக அரசு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கைவிரித்தது. இதனால் அரசு ஊழியர்களின் கண்ணீர்ப் போராட்டம் மீண்டும் தொடர்கதையானது.
இதற்கிடையில் கடந்த 2021ஆம் ஆண்டுச் சட்டப்பேரவை தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்கும் என்று ஆவலோடு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், ஆட்சி அதிகாரத்தை ஏமாற்றிப் பிடித்துவிட்டோம் என்ற இறுமாப்போடு, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெறும் நாளில், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தச் சாத்தியமே இல்லை என்று சட்டப்பேரவையிலேயே திமுக அரசு அறிவித்திருப்பது அரசு ஊழியர்களை நம்ப வைத்து கழுத்தை அறுக்கின்ற கொடுஞ்செயலாகும்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த திமுக, தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறுவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். இதற்குப் பெயர்தான் ஓராண்டில் நூறாண்டு சாதனையா? அரசு ஊழியர்கள் தங்கள் நியாயமான உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் ஒவ்வொரு முறையும் ஆட்சி, அதிகார பலம் கொண்டு அடக்கி ஒடுக்கியும், பணியிடைநீக்கம் என அச்சுறுத்தியும் அவர்களது போராட்டத்தை, தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட இரு திராவிட அரசுகளும் நீர்த்துப்போகச் செய்தன. இதற்கு பெயர்தான் திராவிட மாடலா?
ஆகவே, திமுக அரசு இதற்கு மேலும் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தி, தங்களின் உழைப்புக்கான வாழ்வாதார உரிமைக்காக 20 ஆண்டுக் காலமாகப் போராடிவரும் அரசு ஊழியர்களின் மிக நியாயமான கோரிக்கையான பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
No comments:
Post a Comment