
புதுக்கோட்டையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2020 மார்ச் மாதம் முதலே, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.வைரஸ் பாதிப்பு இந்தாண்டு தான் குறைந்துள்ள நிலையில், நேரடி வகுப்புகளும் தொடங்கப்பட்டது. கொரோனா குறைந்துள்ள நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தாண்டு தான் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல தொடங்கினர். அதேபோல இந்த ஆண்டு மாநிலத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வும் நடைபெறுகிறது. மாநிலத்தில் +2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மொத்தம் 8.37 லட்சம் மாணவ, மாணவிகள் +2 பொதுத்தேர்வை எழுதினர். இதனிடையே புதுக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இரு மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதச் சென்றுள்ளனர். அவர்கள் அடிப்படை மின்னணுவியல் தேர்வு எழுத வேண்டும். இருப்பினும், அவர்களுக்கு மின்னணு பொறியியல் தேர்வுக்கான வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாணவர்கள் தேர்வு கண்காணிப்பாளரிடம் தெரிவித்த போதிலும், அவர்கள் தேர்வு எழுத வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் தேர்வு எழுதாமல் வெறும் விடைத்தாள்களைத் திருப்பி கொடுத்து வந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோர், ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து இருவருக்கும் நேற்று (மே 28 ) மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், தேர்வு நடந்த நாளன்று பணியில் இருந்து இரு ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.+2 பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், இதன் முடிவுகள் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. அதேபோல +1 தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 17ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment