சேலம் பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது. மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாட்டில் தொலைதூரப் படிப்பை வழங்க நான்கு அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே அனுமதியளித்திருக்கிறது பல்கலைக்கழக மானியக்குழு. அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களிலும், அனுமதி பெறாத படிப்புகளிலும் படிப்பவர்களுக்கு இனி எந்தச் சலுகையும் வழங்கப்பட மாட்டாது என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யுஜிசி எச்சரித்தது.தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் 27 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இதில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தொலைதூரப் படிப்புகள் நடத்தி வருகின்றன. சேலம், கருப்பூரில் கடந்த 1997ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இங்கு 2001-ம் ஆண்டு 96 பாடப் பிரிவுகளுடன் தொலைதூரக் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, 156 பாடத் திட்டம் மற்றும் பல்கலைக் கழக தொழில் கூட்டுத் திட்டம் மூலம் 12 கல்வி நிலையங்களில் தொழில்சார் பாடப் பிரிவுகளும் உள்ளன.
தொடக்கத்தில் தமிழகத்தில் 210 மையங்களும், பிற மாநிலங்களில் 70 மையங்களும், வெளிநாடுகளில் 6 மையங்கள் மூலம் மாணவர் சேர்க்கை நடந்தது. தற்போது 350க்கும் மேற்பட்ட மையங்கள் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகம் வெளி மாநிலங்களில் கூடுதலாக மையங்கள் தொடங்கியிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 2014-15ம் ஆண்டு யுஜிசி மாணவர் சேர்க்கை அங்கீகாரம் வழங்கவில்லை. இந்நிலையில் 2016-17 மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக அறிந்த யுஜிசி, பெரியார் பல்லைக்கழக தொலைதூர கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து செய்துள்ளதால், மாணவர்களை சேர்க்க வேண்டாம் என கடிதம் அனுப்பியது.பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது.
மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. முன் அனுமதி பெறாமல் தொலைதூர பட்டப் படிப்புகளை நடத்துவதாகவும் அதனை விசாரிக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது...
No comments:
Post a Comment