1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வரலாம் எனவும், வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டு இருந்தது.சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் செயல்பட தொடங்கியது. அதன் தொடர்ந்து நேரடி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.
கடும் வெயில்
இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து அதற்கான தேதியையும் அறிவித்தது. இந்நிலையில் கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில்தான் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்கள் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொளுத்தி வரும் நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே கூட வருவதில்லை.
ஆல் பாஸ் கோரிக்கை
இதன் காரணமாக பள்ளிக் குழந்தைகளும் வெகுவாக பாதிக்கப்படும் நிலையில், 9 ஆம் வகு வரை உள்ள மாணவர்களை ஆல் பாஸ் செய்ய வேண்டும் எனவும், கோடை விடுமுறையை விரைவில் அறிவிக்குமாறு தமிழக அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதேபோல் தற்போது தமிழக அரசும் மாணவர்களும் நலனை கருத்தில் கொண்டு முன்னரே கோடை விடுமுறையை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழகத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போது தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால், விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். மாணவர்கள் நலன் சார்ந்த முடிவு எடுக்கப்பட்டு விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்." என்றார்.
1-9 வகுப்புகளுக்கு விடுமுறை
இதனையடுத்து தமிழகத்தில் வெயிலின் காரணமாக 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ன்பில் மகேஷ் பொய்யாமொழி, " 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம், தேர்வு இல்லாத நாட்களில் 1 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும், வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
No comments:
Post a Comment