ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் தலைவர் ஷீலா பிரேம்குமாரி தாக்கல் செய்த மனு:
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோருக்கு குறைந்தபட்ச தகுதியை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நிர்ணயித்து 2010 ல் அறிவிப்பு வெளிட்டது.
அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசு தகுதித் தேர்வை நடத்தும் ஏஜன்சியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தை (டி.ஆர்.பி.,) நியமித்தது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்பதை அந்த அரசாணை தெளிவுபடுத்துகிறது.
தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி, தனியார் உதவி பெறும் பள்ளிகளில் செய்யப்படும் எந்தவொரு நியமனங்களுக்கும் அரசு அனுமதி வழங்குவதில்லை.
பட்டதாரி ஆசிரியரை நேரடியாக அல்லது இடமாற்றம் அல்லது பதவி உயர்வு மூலம் நியமிக்கலாம். பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான பிரச்னை தற்போது உள்ளது. துவக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பட்டப்படிப்பு, பி.எட்.,மற்றும் தகுதித் தேர்வு தேர்ச்சி தகுதிகளாகும்.
இது தமிழக அரசு 2020 ஜன.,20 ல் வெளியிட்ட துவக்க கல்வி சார்நிலை பணிக்கான சிறப்பு விதிகளில் உள்ளது. பட்டதாரி ஆசிரியருக்கான தகுதிகளைப் பொறுத்தவரை நேரடி நியமனத்திற்கு மட்டுமே தகுதித் தேர்வில் தேர்ச்சி தேவை என உள்ளது. இது பட்டதாரி ஆசிரியராக ஒருவர் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதித் தேர்வு தேர்ச்சியை தகுதியாக வைத்திருக்க வேண்டியதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.
இது இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகளுக்கு எதிரானது. அதை ரத்து செய்ய வேண்டும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு ஷீலா பிரேம்குமாரி மனு செய்தார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு: எந்த ஒரு பதவி உயர்வும் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என இடைக்கால உத்தரவிட்டது. மத்திய கல்வித்துறை செயலாளர், மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது
No comments:
Post a Comment