அரசு ஊழியர்களின் ஆதரவைப் பெற்ற கட்சி என்ற பெயர் தி.மு.கவுக்கு இருந்து வரும் நிலையில், அக்கட்சியும் தற்போது அரசு ஊழியர்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.தேர்தலுக்கு முன்பு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என தி.மு.க உறுதியளித்த நிலையில், தற்போது பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட வாய்ப்பில்லை எனக் கூறியிருப்பது அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.“அரசு ஊழியர்கள்பொதுவாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தி.மு.கவுக்கு ஆதரவாக இருப்பார்கள் எனச் சொல்லப்படுவதுண்டு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2003ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் வீட்டுக்கு அனுப்பியது உள்ளிட்ட காரணங்களால் அக்கட்சியின் மீது அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருப்பார்கள். இதனாலேயே 2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்கள் தி.மு.கவுக்கு ஆதரவாகப் பணியாற்றினர். இத்தனைக்கும் அப்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்தது அ.தி.மு.கதான்.
திமுகவுக்கு ஆதரவு
தி.மு.க ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கு அடிக்கடி சம்பள உயர்வும், சலுகைகளும் கிடைக்கும் என்ற கருத்து நிலவுகிறது. கருணாநிதி முதல்வராக இருந்த காலம் முதல் அரசு ஊழியர்களுக்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தியது தி.மு.க. ஒவ்வொரு தேர்தலிலும் அரசு ஊழியர்கள் வாக்களிக்கும் தபால் வாக்கு எண்ணிக்கையின்போது தி.மு.கவே பெரும்பாலும் முன்னிலை வகிப்பது இதனால்தான்.
நடவடிக்கை எடுக்காத அதிமுக
பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என 2011 மற்றும் 2016 தேர்தல்களின்போது ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நடவடிக்கை இல்லை. அடுத்து வந்த எடப்பாடி பழனிசாமியும் கண்டு கொள்ளவில்லை என்பது பொதுவான புகாராக உள்ளது. இதனால், கடந்த தேர்தலிலும் அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் தி.மு.கவுக்கே ஆதரவளித்தனர். அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் வாக்குகளும் திமுகவுக்கு சென்றடைந்தன.
திமுகவும் ஏமாற்றம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. தேர்தலுக்கு முன்பு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என தி.மு.க உறுதியளித்த நிலையில், ஆட்சிக்கு வந்தபிறகு தி.மு.கவும் இந்த விஷயத்தில் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது.
சாத்தியமே இல்லை
சமீபத்தில் கூட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசும்போதும், நிதிநிலை சீரமைக்கப்பட்ட பிறகு அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். ஆனால், கடந்த 7ஆம் தேதி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையிலேயே அறிவித்தார். இதனால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
போராட்டம் நடத்த திட்டம்
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய போதெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு வஞ்சிக்கிறது என ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் படிப்படியாக போராட்டத்தை முன்னெடுக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் திடமிட்டுள்ளனர். சென்னை ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Source : dailyhunt.in
No comments:
Post a Comment