விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடலைக் கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் சூலக்கரை பகுதியைச் சார்ந்தவர் முருகேசன் – ஈஸ்வரி தம்பதியினர். முருகேசன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இவர்களின் மகன் தினேஷ்(17) தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர்வெளியூர் சென்றிருந்த நிலையில் இன்று தினேஷின் தாத்தா வேலுச்சாமி காலையில் வீட்டில் பேரனை பார்த்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
பின்பு இரண்டு மணி நேரம் கழித்து அவர் வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து இருந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதில் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த தாத்தா அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது தினேஷ் அந்த அறையில் தனது அம்மாவின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே இது குறித்து சூலக்கரை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தினேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சூலக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment