தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன. இன்று தொடங்கியுள்ள தேர்வுகள் வருகிற 31ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.இதனையடுத்து தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வருகிற 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர். தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. தனித்தேர்வர்களாக 5 ஆயிரத்து 673 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுவதற்குப் பதிவு செய்துள்ளனர். தனித்தேர்வர்களுக்கு 115 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களில் அறிவியல் பாடத்தொகுதியில் 5,50,186 மாணவர்களும், வணிகவியல் பாடத்தொகுதியில் 2,69,077 மாணவர்களும், கலை பாடத்தொகுதியில் 15,362 மாணவர்களும், தொழிற்கல்வி பாடத்தொகுதியில் 50,428 மாணவர்களும் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.+2, 10 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு! கோடை விடுமுறை குறித்தும் முக்கிய அறிவிப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வில் 5,299 மாற்றுத்திறனாளி டிஸ்லெக்சியா பாதிப்புள்ள மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர்/வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப் பாடவிலக்களிப்பு, கூடுதல் ஒரு மணி நேரம் ஆகியவை அரசுத் தேர்வுத்துறையால் அனுமதிக்கப்பட்டுள்ளது
வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள தேர்வு மையத்தில் 99 சிறைவாசிகள் தேர்வெழுதவுள்ளனர்.
தேர்வு நுழைவுச்சீட்டில் தேர்வர்களுக்காக சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களில் வழக்கமாக அச்சிடப்படும் அறிவுரைகளை, தேர்வுக்கு முன்னதாகவே தேர்வர்கள் படித்து அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போனை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் செல்போனை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாட்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அலுவலரிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையோ / பகுதி விடைகளையோ தாமே கோடிட்டு அடித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும்.
பொதுத் தேர்வுகள் தொடர்பாக, மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களைத் தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத்தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை 9498383081, 9498383075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment