''மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ளவே, ஒரே நேரத்தில் இரட்டை பட்டப் படிப்பு படிக்கும் வாய்ப்பு தரப்பட்டு உள்ளது,'' என, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவின் தலைவர் எம்.ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து யு.ஜி.சி., தலைவர் ஜகதீஷ் குமார் கூறியுள்ளதாவது:மாணவர்கள் தங்களுடைய பன்முகத் திறமையை வளர்த்து கொள்ளவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்பு களை படிக்க அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது.
இதன் வாயிலாக, மாணவர்கள் தங்களுடைய திறமை, எதிர்பார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்களுடைய கல்வித் தகுதியை சுயமாக நிர்ணயித்து கொள்ள முடியும்.ஒரே நேரத்தில், இரண்டு பட்டப் படிப்புகளுக்கான பாடங்களை எப்படி படிப்பது என்ற கேள்வி எழலாம். ஒரு பட்டப் படிப்பை காலை நேர கல்லுாரியிலும், அதே கல்லுாரியில் அல்லது மற்றொரு கல்லுாரியில் மாலை நேரத்தில் மற்றொரு பட்டப் படிப்பையும் தொடரலாம் அல்லது ஒரு பட்டப் படிப்பை கல்லுாரியிலும், மற்றொன்றை 'ஆன்லைன்' வாயிலாகவும் படிக்க முடியும்.
ஒரு மாணவரே, இரண்டு படிப்புகளில் சேருவதால், மற்றொரு மாணவருக்கான வாய்ப்பு பறிபோகாது. ஒரு பட்டப் படிப்பை படிக்கும் மாணவர்களுக்கே கல்லுாரிகளில் முன்னுரிமை தர வேண்டும். காலியாக இருக்கும் இடங்களில் மட்டுமே, இரட்டை பட்டப் படிப்பு மாணவர்களை சேர்க்க வேண்டும்; இரட்டை பட்டப் படிப்பு கட்டாயமில்லை; ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment