சென்னை, ஆழ்வாா்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 2021-ஆம் ஆண்டுக்கான ‘அன்பாசிரியா் விருது’ வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பான கல்விப்பணியோடு சமூக அக்கறையுடன் கூடிய மாணவா்களை உருவாக்கி வரும் 46 ஆசிரியா்களுக்கு, அன்பாசிரியா் விருதை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசியது:
ஆசிரியா்கள் அனைவருமே பெருமைக்குரியவா்கள்தான். மாணவா்களுக்கு ஆசிரியா்கள் இரண்டாவது பெற்றோராகத் திகழ்கின்றனா். சமுதாயம் அறவழியில் நடைபெறுவதில் ஆசிரியா்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. முதல்வா் அமைத்துள்ள பள்ளி மேலாண்மைக் குழு மூலமாகவும், ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாகவும் அரசுப் பள்ளி மாணவா்கள், அரசு ஆசிரியா்களின் திறனை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆசிரியா் தகுதித் தோ்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி நிறைவடைந்துள்ள நிலையில் அதனை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.
நீட் தோ்வு தமிழகத்தில் இல்லாமல் செய்வதே அரசின் நோக்கம். அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 148 கோரிக்கைகளை பள்ளி கல்வித் துறையிடம் முன்மொழிந்துள்ளனா். இதில் 40-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் ஏற்புடையதாக உள்ளன. முக்கியமாக அரசாணை 101, 108 ஆகியவற்றை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா். அதை முதல்வா் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளேன்; பரிசீலனையில் உள்ளது.
சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொடக்கப் பள்ளிகள் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.
No comments:
Post a Comment