சென்னை: கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளிக் குழுமத்தின் 30-ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 30-ம் ஆண்டு நினைவுக் கல்வெட்டைத் திறந்துவைத்து, விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த மாணவர்களுக்கும், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கினார். பின்னர் முதல்வர் பேசியதாவது: மாணவர்களைப் பார்க்கும்போது எனக்கு 10 வயது குறைந்து இருப்பதாக கருதுகிறேன்.
நான் முதல்வராகப் பதவியேற்று அடுத்த மாதம் 7-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தமிழக மக்களுக்காக உறக்கம், உணவு, நேரம் பார்க்காமல் நானும், அமைச்சர்களும், அதிகாரிகளும் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும்.
நாட்டிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். திமுகவுக்கு வாக்களித்த மற்றும் வாக்காளிக்காத அனைவருக்காகவும்தான் பணியாற்றி வருகிறோம்.
எவர்வின் என்றால் எப்போது வெற்றி என்று பொருள். கொளத்தூர் தொகுதியில் உள்ள இப்பள்ளி கடந்த 30 ஆண்டுகளாக சிறந்து விளங்குகிறது. இங்கு பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, இப்பள்ளி கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. முதல்வராகப் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக ஒரு பள்ளி நிகழ்ச்சியில், அதுவும் எனது கொளத்தூர் தொகுதியில் உள்ள இப்பள்ளியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக பெண் ஆசிரியர்களை மட்டுமே கொண்டு இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களுக்கு கல்விச் சேவை வழங்குவதில் இப்பள்ளி சிறந்து விளங்குகிறது.
ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. அதேபோல, அனைத்து துறைகளும் சமச்சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் திராவிட மாடல் ஆட்சி.
பள்ளிக் காலத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்படும் நட்புணர்வு என்றும் தொடர வேண்டும். ஒற்றுமை இருந்தால்தான் நாடும் வளர்ச்சி அடையும்.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடப்பாண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.36,895 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கரோனா கால முடக்கத்தால் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாணவர்களின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்துக்கும் அடித்தளம் அமைப்பது பள்ளிப் பருவம்தான். எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதும்கூட இப்பருவம்தான்.
கற்றல் என்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செயல்பாடாக மாற வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் உதவிபுரிய வேண்டும். மாணவர்களுக்கு அறிவைப் புகட்டி, அறிவியல் பூர்வமான சிந்தனைகளை வளர்த்து, சமூகத்தில் பொறுப்புமிக்க மனிதர்களாக உருவாக்கும் இல்லங்கள்தான் பள்ளிகள்.
எனவே, ஆசிரியர்கள் மாணவர்களை அரவணைத்து வழி டத்த வேண்டும். நமது மாநிலமும், நாடும் சிறந்து விளங்க, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் இணைந்து, சமத்துவ சிந்தனையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்த விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ தாயகம் கவி, மாநகராட்சி மேயர் பிரியா, எவர்வின் பள்ளி நிறுவனர் மற்றும் முதல்வர் பா.புருஷோத்தமன், முதன்மை நிர்வாக அதிகாரி வி.மகேஸ்வரி, இயக்குநர்கள் எம்.பி.வித்யா, வி.முரளிகிருஷ்ணா மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment