செயல்பாட்டு குளறுபடி காரணமாக, பள்ளிக்கல்வி துறை நிர்வாகத்துக்கான, 'எமிஸ்' தளத்தின் செயல்பாடுகள் ஐந்து நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.தமிழக பள்ளிக்கல்வித் துறையில், கற்பித்தல் பணிகளை விட, நிர்வாக ரீதியாக ஆசிரியர்கள் இடமாறுதல், தனியார் நிறுவனங்களின் கற்பித்தல் பொருட்களை சோதனை செய்தல்.வருகை பதிவை ஆன்லைனில் பதிவிடுதல், இல்லம் தேடி கல்வி திட்ட புள்ளி விபரம் சேகரித்தல், சுகாதாரத்துறை கோரும் விபரங்களை பதிவு செய்தல் போன்ற செயல்பாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இவற்றை 'டிஜிட்டல்' முறையில் மேற்கொள்ள, எமிஸ் என்ற கல்வி மேலாண்மை தளம் செயல்படுத்தப் படுகிறது.இந்த தளத்தில் தகவல்களை பதிவு செய்ய, அரசு பள்ளி ஆசிரியர்கள், தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக செலவிட வேண்டியுள்ளது. பள்ளி நேரம் போக, வீட்டில் இருந்தும் எமிஸ் பணிகளை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.சர்வதேச அளவில் கணினி தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், எமிஸ் இணையதளம், 10 ஆண்டுகளுக்கு பிந்தைய நிலையில் செயல்படுவது குறித்தும், தொழில்நுட்ப குளறுபடி அதிகரித்துள்ளது குறித்தும், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம், ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, தற்காலிக ஏற்பாடாக, நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு எமிஸ் தளத்தை முடக்கி வைக்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தளத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி விட்டு, முறையான தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளை, ஐந்து நாட்களில் பார்த்து முடிக்க வேண்டும் என, எமிஸ் தள ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆசிரியர்கள், தங்களின் கற்பித்தல் மற்றும் தேர்வு பணிகளை பார்க்கலாம் என்பதால், நிம்மதி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment