நேர்காணல் என்றதுமே வேலை தேடுபவர்களுக்கு ஒருவித பதற்றம் ஏற்படுவது இயல்பு. நேர்காணல் பற்றிய நிறைய விஷயங்களை நீங்கள் அறிந்து வைத்திருக்கலாம். சிறப்பாக உடை அணிவது, அந்த நிறுவனத்தைப் பற்றி அறிந்து வைத்திருப்பது, கேள்விகளுக்கு தயார் நிலையில் இருப்பது போன்றவை வழக்கமான நடைமுறைகள்தான். இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்துகொண்ட பின்பும் நேர்காணலில் தடுமாற்றம் வருவது ஏன்? அந்த தடுமாற்றத்தை வென்று வெற்றிகரமாக நேர்காணலை எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி? இங்கே பார்க்கலாம்...
* இலக்கு அறிதல்
பணிக்கான தகுதிகள் மற்றும் திறமைகளுடன் தயார் நிலையில் இருப்பது நேர்காணலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனோதைரியத்தை தரும். நிறு வனத்தின் இலக்கு மற்றும் வேலை வழங்குபவர்கள் லாபம் அடையும் படியான திட்டங்கள், அதற்கான கேள்வி பதிலுக்கு நீங்கள் தயார் நிலையில் இருப்பதும் வெற்றியை உங்கள் வசமாக்கும்.
* வசதிகளை உருவாக்குங்கள்
நேர்காணல் வளாகம் எப்படி இருக்கும், என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கும் என்பது உங் களுக்கு தெரியுமென்றால் அதற்கேற்ப நேர்காணலுக்கு தயாராவது சிறப்பாக இருக்கும். நேர்காணல் தேதி, இடம் பற்றிய விவரங்களை முன்கூட்டியே தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதுவே நேர்காணலை எதிர்கொள்ளும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துவிடும். நேர்காணல் விண்ணப்பதாரர்களை நிதானமாக எதிர்கொள்ளும் வகையில் பல நிறுவனங்கள் கனிவாக உபசரிப்பது உண்டு. அது அவர்கள் பதற்றம் தணிய காரணமாக இருக்கும். ஒருவேளை அப்படிப்பட்ட சூழல் இல்லாவிட்டால், தேர்வாளர் உங்களை அழைக்கும் முன்பாக காபி அல்லது தண்ணீர் குடித்து உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வது பதற்றம் தணிப்பதாக அமையும்.
* தகவல்களை சரியாக அளியுங்கள்
நீங்கள் சுயவிவர பட்டியலில் (ரெஸ்யூமில்) கொடுத்த விவரங்களின் அடிப்படையில் உங்களை மதிப்பிட்டு கேள்விகள் கேட்பார்கள். உங்கள் தகுதியை கூடுதலாக அறிந்து கொள்ள விரும்பினால், உங்களின் சமூகவலைத்தள கணக்குகளையும் அலசியிருப்பார்கள். எனவே உங்களைப் பற்றிய எந்தவிதமான கேள்விகளுக்கும் சரியான பதில்களையே அளியுங்கள். சமூகவலைத்தள தகவல், ரெஸ்யூம் தகவல், உங்கள் நேரடி கருத்து ஆகியவற்றில் முரண்பாடுகள் தெரிய வேண்டாம்.
* கூச்சமும், தயக்கமும் வேண்டாம்
நேர்காணல் என்பது உரையாடுவதற்குத்தான். இங்கே இயல்பாக பேசுவதே வெற்றிக்கு வழிவகுக்கும். வேலையைப் பெற வேண்டும் என்ற பதற்றத்திலோ, பேசுவதற்கு கூச்சமும், தயக்கமும் கொண்டு பதிலளிப்பதோ தேவையில்லை. திறமையை வெளிப்படுத்தினால்தான் வேலையைப் பெற முடியும். உங்கள் திறமைகள் சான்றிதழ்களில் மட்டுமல்லாது, பேச்சிலும் எதிரொலித்தால் நேர்காணல் வெற்றியாக முடியும். இந்த தயக்கத்தை போக்குவதற்காக உங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள், விருப்பங்கள் பற்றிய கேள்விகள் கேட்கப்படுவது உண்டு. அது உங்களின் இயல்புகளை வெளிப்படுத்துவதுடன், மேலாண்மைப் பண்புகளையும் காட்டிக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
* கவனிக்கும் ஆற்றலை அதிகப்படுத்துங்கள்
தேர்வாளரின் கேள்விகளை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். கவனிக்கும் ஆற்றலை அதிகப்படுத்துவதன் மூலம் எளிதில் கேள்வியை புரிந்து கொண்டு பதிலளிக்கலாம். மீண்டும் கேட்டுத் தெளிவு பெறுவது தவறு இல்லையென்றாலும், அது உங்களின் தடுமாற்ற நிலை என்று தேர்வாளர் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. கேள்வியின் தன்மையை விளங்கிக் கொள்வதற்காக பதில் கேள்வி கேட்கலாமே தவிர, கவனக்குறைவாக செயல்பட்டு ஒவ்வொரு கேள்விக்கும் தடுமாறிக் கொண்டிருக்கக்கூடாது.
* இயல்பாக நடந்து கொள்ளுங்கள்
நேர்காணலைப் பற்றிய அச்சம் வேண்டாம். வேலை பெறுவது முக்கியம்தான். அதுபற்றிய கவலையை வளர்த்துக் கொள்வதால் ஒன்றும் நேர்ந்துவிடப் போவதில்லை. நல்ல தயாரிப்புகளுடன் செல்வதுடன், பயம் இன்றி இயல்பாக நடப்பது வெற்றியை சுலபமாக்கும். நீங்கள் தெளிவானவர் என்பதை தேர்வாளருக்கு புரிய வைக்கும்.
* அமைதியை முறிக்கலாம், ஆனால் இடை மறிக்கக்கூடாது
குழு நேர்காணலின்போது பொதுவாக கேட்கப்படும் ஒரு கேள்விக்கோ அல்லது விவாதிக்கப்பட வேண்டிய ஒரு கருத்தின்போதோ, அமைதியை கலைத்து நீங்கள் பேசலாம். ஆனால் ஒருவர் பேசும்போது அவர்களை இடைமறித்துக் கொண்டிருக்கக்கூடாது.
No comments:
Post a Comment