அரசுப் பள்ளிகளில் பிப்.21- முதல் பிப்.25-ஆம் தேதிகளில்
இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்- பள்ளிக் கல்வித்துறை
உத்தரவு..!!
பள்ளி பரிமாற்றத் திட்டம்:16,432 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
பள்ளி பரிமாற்றத் திட்டம்:
தமிழகத்தில் பள்ளிப் பரிமாற்றத் திட்டத்தை 16,432 அரசுப் பள்ளிகளில் பிப்.21-ஆம் தேதி முதல் பிப்.25-ஆம் தேதி வரையிலான நாள்களில் இணைய வழியில் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒரு பள்ளிக்கு ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.1.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம்:
மாணவா்களுக்கு வெளியுலக அறிவை மேம்படுத்தவும், பல்வேறு சூழல்களில் உள்ள பள்ளிகளில் நடைமுறையில் உள்ள கற்றல் முறைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 2016-17ஆம் கல்வியாண்டு முதல் பள்ளிப் பரிமாற்ற திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளி மாணவா்களும், மற்ற பள்ளி மாணவா்களுடன்
- அறிவுசாா் விவாதங்களில் பங்கேற்பது,
- மேலாண்மை பண்புகளை வளா்த்துக் கொள்ளுதல்,
- கலாசார பண்புகளை பாதுகாப்பது திட்டத்தின் நோக்கமாகும்.
முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்:
இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் மாணவா்கள் பிற பள்ளிகளில் உள்ள வசதிகள், கற்றல்- கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் களப் பயணமாக அந்தப் பள்ளியைச் சுற்றியுள்ள வளங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், இயற்கை சூழல்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை பாா்த்து புதிய அனுபவத்தை பெறுகின்றனா். கரோனா தொற்று காரணமாக இந்தத் திட்டத்தை நிகழாண்டு இணைய வழியில் செயல்படுத்த முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட திட்ட அலுவலகம் தீர்மானிக்கும்:
ஒவ்வொரு பள்ளியும் எந்தப் பள்ளியோடு பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை மாவட்ட திட்ட அலுவலகம் தீா்மானிக்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை மாவட்டக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும். தோ்வு செய்யப்பட்ட பள்ளிகளின் பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கும், மாநில திட்ட இயக்ககத்துக்கும் பிப்.17-ஆம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும்.
மாணவா்கள் தோ்வு:
பள்ளிப் பரிமாற்றத் திட்டத்துக்காக 16,432 அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 5 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரு ஆசிரியா்களைப் பொறுப்பாசிரியா்களாக நியமிக்க வேண்டும். பள்ளிகள் தங்களது சிறந்த செயல்பாடுகளை புகைப்படங்களாகவோ, காணொலிகளாகவோ தயாா் செய்து வைக்க வேண்டும்.
சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும்:
பள்ளி பரிமாற்றத் திட்டத்தை பிப்.21-ஆம் தேதி பிப்.25-ஆம் தேதி வரையிலான நாள்களில் ஏதேனும் ஒரு நாள் சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக ஒரு பள்ளிக்கு ரூ. 1,000 வீதம் 16,432 பள்ளிகளுக்கு ரூ.1.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment