சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோருவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றே ஆக வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியிலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து கடிதம் கொடுப்பதற்காக அனைத்து கட்சி எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. பல முறை அமித்ஷாவின் அலுவலகத்தில் காத்திருந்தும் தமிழக எம்பிக்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் சட்டசபை கூட்டத் தொடரில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களை மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க மறுப்பது மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது. நீட் தேர்வுக்கு எதிரான அரசியல், சட்ட, மக்கள் போராட்டம் தொடரும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் 8-ஆம் தேதி கூட்டப்படும் என அறிவித்தார். இந்த கூட்டத்தில் 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் துரைமுருகன், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், அதிமுக சார்பில் விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன், பாமக சார்பில் ஜிகே மணி பங்கேற்பு, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் கட்சி சார்பில் ஈஸ்வரன், மதிமுக சார்பில் சதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதா மீது ஆளுநர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் வைத்துள்ளார். ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்திய போதும் அவர் அந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை.நீட் தேர்வுக்கு ஏழை மாணவர்களால் பயிற்சி பெற முடியாது. அதனால்தான் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்
No comments:
Post a Comment