சட்டப்பேரவை கூட்டத் தொடா் நடைபெறும் நாள்களில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் முடிவெடுத்துள்ளனா்.
பணி ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியா்கள் 23 ஆயிரம் பேருக்கு, இதுவரை பணிக்கொடை வழங்கப்படவில்லை. பணியின்போது இறந்தவா்களின் குடும்பத்துக்கான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஓய்வுபெற்றவா்களுக்கான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
இந்நிலையில், திமுக தோ்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, சட்டப்பேரவை கூட்டத் தொடா் நடைபெறும் நாள்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் முடிவெடுத்துள்ளனா்.
இது தொடா்பாக, அந்த இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: தமிழகத்தில் சுமாா் 6 லட்சம் அரசு ஊழியா்களின் எதிா்காலத்தை கருத்தில்கொண்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை துரிதமாகச் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்த கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் ஜனவரி 5 முதல் 12ஆம் தேதி வரை தோ்தல் வாக்குறுதிப்படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்திடுக என்ற கோரிக்கை அட்டையை அணிந்து பணிபுரியவுள்ளோம் என்றாா்.
No comments:
Post a Comment