10, 11, 12-ம் வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்பே சிறந்தது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா 3-வது அலை அதிகரிப்பால் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதால் ஆசிரியர், மாணவர்கள், பணியாளர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு, ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிசம்பர் 27 முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறைக்கு பிறகு ஜனவரி 3ம் தேதி அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்திருந்தது.
ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகளை ரத்து செய்து, ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றுசென்னை உயர்நீதிமன்றத்தில் நெல்லை அப்துல் வஹாபுத்தீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவே நேரடி வகுப்புகளுக்கு அழைப்பு விடுத்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நேரடி வகுப்புகள் நடத்துவது கட்டாயமில்லை, ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது பற்றி பள்ளிகள் முடிவு எடுக்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment