திருநெல்வேலி: நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் எனவும், கட்டிட விபத்து தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பொருட்காட்சிதிடல் அருகே டவுன்சாப்ட்டர் என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த மேல்நிலைப் பள்ளியில் இன்று வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த போது சில மாணவர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றனர். அப்போது மழையில் நனைந்து இருந்த கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் கழிப்பறை சுவர் அருகே நின்று கொண்டிருந்த 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 மாணவர்கள் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு இரு மாணவர்கள் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மேலும் 4 மாணவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்ததையடுத்து சக மாணவர்கள் பள்ளிக் கூடத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆறுதல் கூறினார் .மேலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு,விபத்து குறித்து உரிய விளக்கம் கேட்கப்பட்டு உள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.மேலும் பள்ளி கட்டிடங்களின் நிலை குறித்து பொதுப்பணித்துரை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேட்டுக்கொண்டுள்ளதாகவும்,48 மணி நேரத்தில் நெல்லையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்நிலையில் நெல்லையில் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து பேசியுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் எனவும் கட்டிட விபத்து தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment